குரூப்-2ஏ பதவிகளுக்கான முதன்மை தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது.
குரூப்-2, 2ஏ பதவிகள்
தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) சார் பதிவாளர், உதவி பிரிவு அலுவலர், துணை வணிகவரி அலுவலர், தொழிலாளர் உதவி ஆய்வாளர் பணியிடங்களுக்கு குரூப்-2, 2ஏ போட்டித்தேர்வுகள் வாயிலாக அதிகாரிகளை தேர்வு செய்கிறது. அந்தவகையில் 2024-ம் ஆண்டுக்கான குரூப்-2, 2ஏ பதவிகளில் 2 ஆயிரத்து 327 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டன. தமிழ்நாடு முழுவதும் இருந்து 3 லட்சத்து 9 ஆயிரத்து 841 ஆண்களும், 4 லட்சத்து 84 ஆயிரத்து 74 பெண்களும், 51 திருநங்கைகளும் என மொத்தம் 7 லட்சத்து 93 ஆயிரத்து 966 பேர் இந்த காலி இடங்களுக்கு விண்ணப்பித்து இருந்தனர்.
இந்த சூழலில் குரூப்-2 மற்றும் 2ஏ பணியிடங்களுக்கான முதல்நிலை போட்டித்தேர்வு கடந்த ஆண்டு (2024) செப்டம்பர் மாதம் 14-ந் தேதி நடைபெற்றது. இந்த தேர்வை, விண்ணப்பித்து இருந்த 7 லட்சத்து 93 ஆயிரத்து 966 பேரில், 5 லட்சத்து 81 ஆயிரத்து 305 பேர் மட்டுமே எழுதினார்கள். இதற்கான தேர்வு முடிவுகள் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 12-ந் தேதி வெளியிடப்பட்டது. இதில் மொத்தம் 29 ஆயிரத்து 790 பேர் தேர்ச்சி பெற்றார்கள். இதில் குரூப்-2 பதவிகளுக்கு 7 ஆயிரத்து 987 பேரும், 2ஏ பதவிகளுக்கு 21 ஆயிரத்து 803 பேரும் தேர்வு செய்யப்பட்டார்கள்.
முதன்மை தேர்வு
இதற்கிடையில், குரூப்-2, 2ஏ முதன்மை தேர்வுகள் கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்றது. இதில், குரூப்-2ஏ தேர்வை 20 ஆயிரத்து 33 பேர் எழுதினார்கள். இந்த நிலையில், 1,936 காலிப்பணியிடங்களுக்கான குரூப்-2ஏ முதன்மை தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. தேர்வர்கள் முதன்மை எழுத்து தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் பிற விதிகளின் அடிப்படையில் இருவழித்தொடர்பு முறையில் மதிப்பெண் மற்றும் தரவரிசை வெளியிடப்பட்டுள்ளது.
தேர்வர்கள், http://www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் குரூப்-2ஏ முதன்மை தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். தேர்வு நடைபெற்ற 56 நாட்களில் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து 12-வது முறையாக திட்டமிட்டபடி தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் டி.என்.பி.எஸ்.சி. பெருமிதம் தெரிவித்துள்ளது.