போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு - Thulirkalvi

Latest

Thursday 4 May 2023

போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு

போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு

தேசிய நுகர்வோர் தினத்தையொட்டி நடைபெற்ற போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்கு கலெக்டர் ஸ்ரேயாசிங் பரிசு வழங்கினார். பரிசளிப்பு விழா நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், தேசிய நுகர்வோர் தினம் மற்றும் உலக நுகர்வோர் உரிமைகள் தினத்தை முன்னிட்டு உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை சார்பில் பள்ளி, கல்லூரிகளில் நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் தலைமை தாங்கி, ஓவியப்போட்டி, பேச்சுப்போட்டி, கவிதைபோட்டி, கட்டுரை போட்டி உள்ளிட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மற்றும் கல்லூரிகளை சேர்ந்த 24 மாணவ, மாணவிகளுக்கு பரிசு மற்றும் பாராட்டுசான்றிதழ்களை வழங்கி பேசியதாவது:- 

 விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் பொருட்கள் வாங்குவதில் நுகர்வோர்களாகிய நமக்குரிய உரிமைகளையும், கடமைகளையும் நாம் முழுமையாக அறிந்து கொள்வதோடு, இதனை மற்றவர்களும் அறிந்துகொண்டு பயன்பெறுகின்ற வகையில் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்திட வேண்டும். அனைத்து பள்ளி, கல்லூரிகளிலும் நுகர்வோர் மன்றங்களை உருவாக்கி நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் குறித்து மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்திடுவதோடு, அவர்களின் மூலமாக மக்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. நுகர்வோர் ஒரு பொருளை வாங்கும்போது பதிவுச்சான்று மற்றும் உரிமம் பெற்ற கடைகளில் மட்டுமே பொருள்களை வாங்க வேண்டும். அதன் உண்மை தன்மையை அறிந்து, அப்பொருளின் தரம், தயாரிப்பு தேதி, காலாவதி தேதி மற்றும் முகவரி போன்றவை சரியாக உள்ளதா? என்பதையும் பார்த்து வாங்க வேண்டும். 

நுகர்வோர் நீதிமன்றங்கள் வாங்குகின்ற பொருட்களுக்கான விலை பட்டியலை கட்டாயம் கேட்டுப்பெற வேண்டும். நுகர்வோர் பொருட்களை வாங்கும்போது ஏதேனும் குறைகள் இருந்தால், புகார் தெரிவிக்க மாவட்ட நுகர்வோர் நீதிமன்றங்கள் ஒவ்வொரு மாவட்டத்திலும் செயல்பட்டு வருகின்றது. இந்நீதிமன்றங்களில் நுகர்வோர் தங்களுக்கு கஷ்டமோ, நஷ்டமோ ஏற்பட்டிருந்தால் புகார் தெரிவிக்கலாம். வாங்கும் பொருட்களில் தரமற்ற உணவு பொருள் இருந்தால் உடனடியாக உணவு பாதுகாப்பு அதிகாரிக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். 

பொருட்கள் வாங்குவதில் நுகர்வோர்களாகிய நமக்குரிய உரிமைகளையும், கடமைகளையும் முழுமையாக அறிந்து, அதனை அனைவரும் பின்பற்ற வேண்டும். நுகர்வோர் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை மற்றவர்களுக்கும் ஏற்படுத்திட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் ரமேஷ், உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாக துறை மாவட்ட நியமன அலுவலர் அருண், தமிழ்நாடு, புதுச்சேரி நூகர்வோர் கூட்டமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார், குடிமக்கள் நுகர்வோர் மன்ற மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜேஸ்கண்ணன் உள்பட அரசுத்துறை அலுவலர்கள், கல்லூரி, பள்ளி மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment