இ-சேவை மைய மாவட்ட மேலாளர் பணி தேர்வின்றி நிரப்பப்படுமா?
தமிழக அரசு விளக்கம்
‘தமிழ்நாடு அரசு இ-சேவை மைய மாவட்ட மேலாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம். தேர்வு கிடையாது. நேர்காணல் மட்டும். சம்பளம் மாதம் ரூ.30 ஆயிரம் வழங்கப்படும். விண்ணப்பிக்க கடைசி தேதி வருகிற 16-ந்தேதி’’ என்று குறிப்பிட்டு ஒரு தகவல் வாட்ஸ் அப், எக்ஸ் உள்பட பல்வேறு சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதற்கு தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
இதுகுறித்து தமிழக அரசின் அதிகாரப்பூர்வ சமூக ஊடக கணக்கான தகவல் சரிபார்ப்பகம் வெளியிட்டுள்ள பதிவில் கூறப்பட்டு உள்ளதாவது:-
தமிழ்நாடு அரசு மின் ஆளுமை முகமையின் நீலகிரி மற்றும் தென்காசி மாவட்டங்களுக்கான மேலாளர் பணிக்கு விண்ணப்பிக்கக்கோரி தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. பணியில் சேர விரும்புவோருக்கான தகுதி மற்றும் தேர்வு முறை குறித்த தகவலும் அதில் இடம் பெற்றுள்ளது. அதன்படி, 2 மணி நேரம் இணையவழித்தேர்வு நடத்தப்பட்டே பணியாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்று தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. தேர்வு இல்லாமல் பணியில் சேரலாம் என்று பரவும் தகவல் தவறானது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.