TAPS - உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம் குறித்து 2 வாரத்தில் அரசாணை: ஐகோர்ட் கிளையில் அரசு தகவல் - Thulirkalvi

Latest

Friday, 9 January 2026

TAPS - உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம் குறித்து 2 வாரத்தில் அரசாணை: ஐகோர்ட் கிளையில் அரசு தகவல்

TAPS - உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம் குறித்து 2 வாரத்தில் அரசாணை: ஐகோர்ட் கிளையில் அரசு தகவல் 
தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம் குறித்து 2 வாரத்தில் அரசாணை வெளியிடப்படும் என ஐகோர்ட் கிளையில் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல்லை சேர்ந்த பிரடெரிக் ஏங்கெல்ஸ், கடந்த 2012ல் ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: தமிழ்நாட்டில் 1.4.2003க்கு பிறகு பணியில் சேர்ந்த அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு புதிய ஓய்வூதியத்திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், இதுநாள் வரை புதிய ஓய்வூதிய திட்டத்திற்கான விதிமுறைகள் வகுக்கப்படவில்லை. ஒன்றிய அரசு 2013ல் ஓய்வூதிய நிதி ஒழுங்காற்று மேம்பாட்டு ஆணையம் அமைத்துள்ளது. இதை தமிழ்நாட்டில் பின்பற்றவில்லை. 

ஓய்வூதிய திட்டம் தொடர்பாக ஆய்வு நடத்திய வல்லுனர் குழு அரசிடம் பல்வேறு பரிந்துரைகளை அளித்துள்ளது. இந்த பரிந்துரைகளை பின்பற்றுவது தொடர்பாக அரசாணையோ, விதிமுறைகளோ வகுக்கப்படவில்லை. இதனால் ஓய்வூதிய பலன்களை பெற முடியாமல் பலர் தவிக்கின்றனர். எனவே, புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துமாறு உத்தரவிட வேண்டும். இவ்வாறு கூறியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், பி.கலைமதி ஆகியோர் முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது. தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் ஆஜராகி, ‘‘தமிழ்நாடு அரசு தற்போது பழைய ஓய்வூதிய திட்ட அடிப்படையில், தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தை அறிவித்துள்ளது. இது குறித்து இன்னும் 2 வாரங்களில் முறைப்படி அரசாணை வெளியிடப்படும். 

எனவே, இந்த மனுவை விசாரிக்கத் தேவையில்லை’’ என்றார். அப்போது நீதிபதிகள், ‘‘மனுதாரரின் கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது. எனவே, இந்த மனுவை முடித்து வைக்கலாமா’’ என்றனர். மனுதாரர் தரப்பில் தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடும் வரை வழக்கை நிலுவையில் வைக்கலாம் என தெரிவிக்கப்பட்டது. இதனை பதிவு செய்த நீதிபதிகள், வழக்கு விசாரணையை ஜன.21ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

No comments:

Post a Comment