பிளஸ் டூ படித்த மாணவர்களுக்குப் பயன்படும் சான்றிதழ்கள் குறித்து மேலும் சில
விவரங்கள்:
தமிழ்நாட்டைச் சேர்ந்த முதல் தலைமுறை பட்டதாரி மாணவர்கள் கல்லூரியில்
சேர்ந்து உயர் கல்வி படிப்பதற்காகத் தமிழ்நாடு அரசு கட்டணச் சலுகையை
வழங்கிவருகிறது. அரசு, தனியார் பொறியியல் கல்லூரிகள், மருத்துவக் கல்லூரிகள், பல்
மருத்துவக் கல்லூரிகள், கால்நடை மருத்துவக் கல்லூரிகள், வேளாண்மை கல்லூரிகள்,
சட்டக் கல்லூரிகளில் இதுவரை பட்டதாரிகளே இல்லாத குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள்
கவுன்சலிங் மூலம் தொழிற்கல்வி படிப்பதை ஊக்குவிப்பதற்காகச் சாதிப் பாகுபாடு
இல்லாமலும் வருமானத்தைக் கணக்கில் கொள்ளாமலும் அந்த மாணவர்களின் தொழிற்கல்விக்
கட்டணச் (Tuition Fee) செலவை அரசே ஏற்றுக்கொள்கிறது.சுயநிதிப் பொறியியல்
கல்லூரிகளிலும் அரசு உதவிபெறும் கல்லூரிகளிலும் சுய ஆதரவுப் படிப்புகளில் (செல்ஃப்
சப்போர்ட்டிங் கோர்ஸ்) படிக்கச் சேரும் மாணவர்களுக்கும் அகில இந்தியத்
தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் (ஏ..ஐ.சி.டி.இ.) முதல் தலைமுறை பட்டதாரிக்கான
கல்விக் கட்டணச் சலுகை வழங்குகிறது.
ஒவ்வொரு கல்லூரியிலும் ஒவ்வொரு பாடப்பிரிவிலும்
படிக்கச் சேரும் 5 சதவீத மாணவர்களுக்கு இந்தச் சலுகை வழங்கப்படும். இந்தச்
சலுகையைப் பெற விரும்பும் மாணவர்களுடைய பெற்றோரின் வருமானம் ஆண்டுக்கு ரூ.4.5
லட்சத்துக்குக் குறைவாக இருக்க வேண்டும்ஒற்றைச்சாளர முறை மூலம் அரசு, அரசு
உதவிபெறும், தனியார் பொறியியல் கல்லூரிகளில் நேரடியாக இரண்டாம் ஆண்டில் சேர்ந்து
படிக்கும் முதல் தலைமுறை பட்டதாரி மாணவர்களுக்கும் இந்தக் கல்விக் கட்டணச் சலுகை
உண்டு. தமிழ்நாட்டில் கவுன்சலிங் மூலம் பொறியியல் கல்லூரிகளில் படிக்கும் முதல்
தலைமுறை பட்டதாரிகளுக்கு வழங்கப்படும் கல்விக் கட்டணச் சலுகை தகுதியுள்ள இலங்கைத்
தமிழ் அகதி மாணவர்களுக்கும் நீட்டிக்கப்பட்டுள்ளது. சான்றிதழைப் பெற... முதல்
தலைமுறை பட்டதாரி என்பதற்கான சான்றிதழ் பெறுவதற்குப் பள்ளிகளில் பிளஸ் டூ
படிக்கும், பட்டதாரிகளே இல்லாத குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் இ-சேவை மையங்களின்
மூலம் இணையம்வழி விண்ணப்பிக்க வேண்டும். தற்போது, அரசு வேலைவாய்ப்பகங்கள் வழியாக
நிரப்பப்படும் அரசுப் பணியிடங்களில் முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பில்
முன்னுரிமை அளிப்பதற்கான அரசு ஆணையும் பிறப்பிக்கப் பட்டுள்ளது.
ஒரு குடும் பத்தில்
ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் இருந்தால், முதலில் பட்டம் பெறுபவரே இந்த முன்னுரிமையைப்
பெற முடியும். அண்ணன் தம்பிகள் கூட்டுக் குடும்பமாக ஒரே வீட்டில்
வசிக்கும்பட்சத்தில் அக்குடும்பத்தில் முதலில் பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு
மட்டும் முதல் பட்டதாரி சான்றிதழ் (First Graduate Certificate) வழங்கப்படும்.
பட்டதாரிகள் இல்லாத குடும்பத்தில் இரட்டையர்கள் இருந்தால், அவர்கள் இருவருக்கும்
இந்தச் சான்றிதழ் வழங்கப்படும். இந்தச் சான்றிதழ் பெறுவதற்கு வயது வரையறை கிடையாது.
எந்த ஆண்டு பட்டப் படிப்பை முடித்திருந்தாலும் முதல் பட்டதாரி சான்றிதழைப் பெறலாம்.
உரிய ஆவணங்களுடன் இ-சேவை மையத்தின் மூலம் இந்தச் சான்றிதழ் கேட்டு
வி்ண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் சரிபார்க்கப்பட்டுத் தகுதியுடையவர்களுக்கு முதல்
பட்டதாரி சான்றிதழ் வழங்கப்படுவது குறித்து குறுஞ்செய்தி அனுப்பப்படும். அதன்பிறகு,
இணையவழியில் அந்தச் சான்றிதழைத் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
மாற்றுத்திறனாளி
சான்றிதழ்: கல்லூரிப் படிப்புகளில் மாற்றுத்திறனாளி களுக்கான இடஒதுக்கீட்டின் கீழ்
இடம்பெறுவதற்கு மாற்றுத்திறனாளி என்பதற்கான சான்றிதழ் தேவைப்படும். மாவட்ட
மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் இந்தச் சான்றிதழ்களைப் பெறுவதற்கான தகவல்களைக்
கேட்டறிந்து, உரிய ஆவணங்களுடன் சிறப்பு மருத்துவ அலுவலருக்கோ மருத்துவ போர்டுக்கோ
விண்ணப்பிக்க வேண்டியிருக்கும். முன்னாள் ராணுவ வாரிசு சான்றிதழ்: ராணுவத்தில்
பணிபுரிந்தவர்களின் வாரிசுகளுக்கு உயர் கல்விப் படிப்புகளில் தனி இடஒதுக்கீடு
இருக்கிறது. எனவே, அந்த இடஒதுக்கீட்டின்கீழ் இடங்களைப் பெறுவதற்கு முன்னாள்
ராணுவத்தினரின் வாரிசு என்கிற சான்றிதழ் தேவைப்படும். அதற்கு, தமிழ்நாடு முன்னாள்
ராணுவத்தினர் நல வாரியத்தின் உதவி இயக்குநர் அலுவலகத்தில் முன்னாள் ராணுவத்தினரின்
வாரிசு என்பதற்கான சான்றிதழைப் (Certificate of Dependency on Ex-servicemen) பெற
வேண்டும்.
விளையாட்டுச் சான்றிதழ்: மருத்துவம், பொறியியல் போன்ற தொழிற்படிப்புகளில்
விளையாட்டு வீரர்களுக்கு எனத் தனி இடஒதுக்கீடு உள்ளது. சர்வதேச, தேசிய, மாநிலப்
போட்டிகளில் வெற்றி பெற்றவரா அல்லது பங்கேற்றவரா என்பது போன்று மாணவர்களின்
விளையாட்டுச் சாதனைகள் கணக்கிடப்பட்டு மதிப்பெண்கள் வழங்கப்படுகின்றன. இந்தப்
போட்டிகளில் மாணவர்கள் பெற்ற சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டுத் தனி ரேங்க் பட்டியல்
தயாரிக்கப்படும். அதன் அடிப்படையில் இந்தப் படிப்புகளில் சேரத் தகுதியுடைய
மாணவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இந்தத் தரவரிசைப் பட்டியலைத் தயாரிக்க
பிளஸ் டூ தேர்வில் எடுத்த மதிப்பெண்கள் கணக்கில் கொள்ளப்பட மாட்டாது. ஆனாலும், அந்த
மாணவர்கள் குறைந்தபட்சத் தகுதி மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டியது அவசியம்.