அரசு ஊழியர்களுக்கு ஆயுள் மற்றும் விபத்து காப்பீடு ரூ.1 கோடி வழங்கும் வகையில் முன்னோடி வங்கிகளுடன் முதல்-அமைச்சர் மு,க.ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
அரசு ஊழியர்களுக்கு காப்பீடு
அரசு ஊழியர்களின் நலனிலும், அவருடைய குடும்பத்தினரின் நலனிலும் மிகுந்த அக்கறை கொண்டுள்ள முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அரசு ஊழியர்களுக்கான ஈட்டிய விடுப்பினை இவ்வாண்டு முதலே வழங்க உத்தரவு வழங்கினார். அரசு ஊழியர்களின் நலன்காக்க பல்வேறு சலுகைகளையும் சட்டசபை கூட்டத்தொடரில் அறிவித்தார். வளர்ந்த நாடுகளில் தனிநபர் ஆயுள் காப்பீடு மற்றும் விபத்து காப்பீட்டினைக் கட்டாயமாக வைத்திருப்பது நடைமுறையில் உள்ளது.
இன்றைய காலகட்டத்தில் தனிநபர் ஒருவர் ஆயுள் காப்பீடு மற்றும் தனிநபர் விபத்து காப்பீடு போன்றவற்றினைப் பொதுச்சந்தையில் பெறும்போது பெருந்தொகையை செலவு செய்ய வேண்டியுள்ளது. நிகழ்வுகளில், அரசு ஊழியர்கள் ஆயுள் காப்பீடு மற்றும் தனிநபர் விபத்து காப்பீடு போன்றவற்றிற்கு பெரும் தொகையைச் செலவழிப்பதைத் தவிர்த்து காப்பீடுகளை கட்டணமின்றிப் பெறும் வகையில் செய்ய அரசு உத்தேசித்தது. அதன் அடிப்படையில் முன்னோடி வங்கிகளிடம் இதுகுறித்து நடத்தப்பெற்ற பேச்சுவார்த்தையின் பலனாக பல சலுகைகளை வங்கிகள் தர முன்வந்துள்ளன.
ரூ.10 லட்சம் உதவித்தொகை
இதுகுறித்து நிதி அமைச்சர், தற்போது நடைபெற்ற சட்டசபை கூட்டத்தொடரின் பட்ஜெட் அறிக்கையை தாக்கல் செய்தபோது, அரசு அலுவலர்கள் எதிர்பாராத விதமாக விபத்தில் இறந்தாலோ, விபத்தால் நிரந்தர ஊனமடைந்தாலோ தனிநபர் விபத்து காப்பீட்டு தொகையாக ரூ.1 கோடி நிதியை, விபத்தில் இறந்த அரசு அலுவலரின் குடும்பத்தில் உள்ள திருமண வயதை எட்டியுள்ள மகளின் திருமண செலவுகளுக்காக மகள் ஒருவருக்கு தலா ரூ.5 லட்சம் வீதம், 2 மகள்களுக்கு ரூ.10 லட்சம் வரை நிதியுதவி அளிக்கப்படுகிறது.
விபத்து காரணமாக இறந்த அரசு அலுவலரின் குடும்பத்தில் பள்ளிக்கல்வியை நிறைவு செய்து கல்லூரியில் உயர்கல்வி பயிலும் மகளின் உயர்கல்விக்கான உதவித்தொகையாக ரூ.10 லட்சம் வரையும், அரசு அலுவலர்கள் தங்களது பணிக்காலத்தில் எதிர்பாராமல் இயற்கை மரணம் அடைந்தால் ஆயுள் காப்பீட்டு தொகையாக ரூ.10 லட்சமும் வங்கிகள் வழங்கும் என தெரிவித்தார்.
7 வங்கிகள் முன்வருகை
இச்சலுகைகளை வழங்க பாரத ஸ்டேட் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, இந்தியன் வங்கி, கனரா வங்கி, ஆக்ஸிஸ் வங்கி, பாங்க் ஆப் பரோடா மற்றும் யூனியன் பாங்க் ஆப் இந்தியா ஆகிய 7 முன்னோடி வங்கிகள் அரசு ஊழியர்கள் தங்களது ஊதியக்கணக்கினைப் பராமரித்து வரும் பட்சத்தில் எந்தவிதக் கட்டணமுமின்றி வழங்க முன்வந்துள்ளன.
இச்சலுகைகள் மட்டுமின்றி தனிநபர் வங்கிக் கடன், வீட்டுக்கடன், கல்விக் கடன் ஆகியவற்றை அரசு அலுவலர்கள் பெறும்போது உரிய வட்டி சலுகைகள் வழங்கவும் முன்வந்துள்ளன.
புரிந்துணர்வு ஒப்பந்தம்
இந்த சலுகைகளை வங்கிகள் அரசு ஊழியர்களுக்கு வழங்குவதை உறுதி செய்யும் வகையில், சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், அரசு சார்பில் கருவூலம் மற்றும் கணக்குகள் துறை இயக்குனர் மற்றும் முன்னோடி வங்கிகளின் உயர் அலுவலர்களால் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடப்பட்டன.
நிகழ்ச்சியில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, தலைமைச் செயலாளர் நா.முருகானந்தம், நிதித்துறை முதன்மைச் செயலாளர் த.உதயச்சந்திரன், நிதித்துறை செயலாளர் (செலவுகள்) எஸ்.நாகராஜன், கருவூலம் மற்றும் கணக்குகள் துறை இயக்குனர் தி.சாருஸ்ரீ மற்றும் வங்கிகளின் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
1,118 போலீஸ் குடியிருப்புகள்
சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் மேன்ஷன் சைட் என்ற இடத்தில் ரூ.380 கோடியே 98 லட்சம் செலவில் 896 போலீசாருக்கான குடியிருப்புகள் கட்டப்பட உள்ளது. கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் ரூ.76 கோடியே 15 லட்சம் செலவில் 222 போலீஸ் குடியிருப்புகள் அமைய இருக்கிறது. மொத்தம் ரூ.457 கோடியே 14 லட்சம் செலவில் 1,118 போலீஸ் குடியிருப்புகள் கட்டும் பணிக்கு சென்னை தலைமை செயலகத்தில் இருந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று காணொலி மூலம் அடிக்கல் நாட்டினார்.
மேலும் அவர், கோவை மத்திய சிறையை இட நெருக்கடி காரணமாக கோவை புறநகர் பகுதியான பிளிச்சி பகுதிக்கு மாற்றி அமைக்கும் வகையில் முதல்கட்டமாக ரூ.211 கோடியே 57 லட்சம் செலவில் கட்டப்பட உள்ள ஆண்கள் சிறை, 111 சிறைக்காவலர் குடியிருப்புகள், கான்கிரீட் சாலை மற்றும் மதில் சுவர் ஆகிய பணிகளுக்கும் அடிக்கல் நாட்டினார்.