பொதுத்தேர்வில் தோல்வியடைந்த
மாணவர்களை துணைத்தேர்வு எழுத வைக்க நடவடிக்கை
தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தல்
தமிழகத்தில் பிளஸ்-2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் கடந்த 8-ந்தேதி வெளியானது. தேர்ச்சி சதவீதம் 95.03 ஆக உள்ளது. தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கான துணைத்தேர்வுகள் அடுத்த மாதம் (ஜூன்) 25-ந்தேதி தொடங்கி ஜூலை மாதம் 2-ந்தேதி வரை நடைபெற உள்ளது. இதற்கான விண்ணப்பப்பதிவு வருகிற 29-ந்தேதி (வியாழக்கிழமை) வரை நடைபெறுகிறது. எஸ்.எஸ்.எல்.சி., மற்றும் பிளஸ்-1 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு வருகிற ஜூலை மாதம் 4-ந்தேதி தொடங்குகிறது.
இதற்கான விண்ணப்பப்பதிவு வருகிற 22-ந்தேதி தொடங்கி அடுத்த மாதம் (ஜூன்) 6-ந்தேதி வரை நடைபெறுகிறது.
இந்த நிலையில், பிளஸ்-2, பிளஸ்-1 மற்றும் எஸ்.எஸ்.எல்.சி., பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மற்றும் தேர்வில் பங்கேற்காத மாணவர்களை, துணைத்தேர்வில் பங்கேற்க செய்ய உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது.
அந்தவகையில், தேர்ச்சி பெறாத மற்றும் தேர்வில் பங்கேற்காத மாணவர்களை தொடர்பு கொண்டு, அவர்கள் அனைவரும் துணைத்தேர்வில் பங்கேற்கவும், அதற்காக விண்ணப்பிக்கவும் தலைமை ஆசிரியர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
துணைத்தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்களின் விவரங்களை, ‘எமிஸ்' இணையதளத்தில் பதிவு செய்வதை ஆசிரியர்கள் உறுதி செய்யவேண்டும் என்றும் பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது.