இன்றைக்கு வீடு வாங்கும், வீடு கட்டும் பலரும், வீட்டுக் கடன் உதவியால்தான் அதில் இறங்கு ஆனால், நீ...ண்ட காலத்துக்கு மாதந்திர தவணை செலுத்தும்போது, அலுப்பாக இருக்கும். வட்டியாக அதிக தொகை செலுத்த வேண்டியிருக்கும்.
இதுபோன்ற நிலையில், என்ன செய்தால் வீட்டுக் கடன் வட்டித்தொகையை மிச்சப்படுத்தலாம் என்று பார்க்கலாமா...
→ போனஸ், இன்சென்டிவ் போன்ற எதிர்பாராத வருமானம் கிடைக்கும்போது அதை நமது வீட்டுக் கடனை விரைவாக செலுத்தப் பயன்படுத்தலாம். நீங்கள் ஒவ்வொரு முறையும் இவ்வாறு கூடுதல் தொகை செலுத்தும்போது, நிலுவையில் உள்ள கடன் தொகை உடனடியாக குறைக்கப்படுகிறது. மீதமுள்ள கடன் தொகைக்கு மட்டும்தான் வட்டி வசூலிக்கப்படு கிறது. காலப்போக்கில் நிலுவைத் தொகையில் நீங்கள் பணம் செலுத்தி குறைத்துக் கொண்டே வந்தால், வட்டித்தொகை மிச்சமாகும்.
→ பணம் இருக்கும்போதெல்லாம் பகுதி அளவு வரவு வைப்பது, வீட்டுக் கடனை விரைவாக செலுத்தி முடிக்க உதவும். உதாரணமாக, ஒருவரது வீட்டுக் கடன் நிலுவையாக ரூ.40 லட்சம் இருக்கிறது. அதற்கு அவரிடம் வசூலிக்கப்படும் வட்டி விகிதம் 8 சதவீதம். கடனை 20 ஆண்டுகள் செலுத்த வேண்டும் என்று வைத்துக்கொள்வோம். அவர் ரூ.1 லட்சத்தை முன்கூட்டியே வரவு வைக்கிறார் என்றால், அவரது கடன் 14 மாதங்களுக்கு முன்னதாகவே முடிந்துவிடும். இதனால் ரூ.3.72 லட்சம் வரை வட்டியை சேமிக்கலாம்.
இன்னொரு வழிமுறை: ஒவ்வொரு ஆண்டும் நிலையான தொகையை முன்கூட்டியே செலுத்த முயற்சி செய்வதாக வைத்துக்கொள்வோம்.
ரூ.40 லட்சம் கடன் நிலுவையில் உள்ளது. அதற்கு 8 சதவீதம் வட்டி வசூலிக்கப்படுகிறது. இதன் கடன் காலமும் 20 ஆண்டுகள். ஒவ்வொரு ஆண்டும் ரூ.50 ஆயிரம் முன்கூட்டியே செலுத்தி வந்தோம் என் றால், 16 ஆண்டுகளுக்குள் கடன் முடிந்துவிடும். மேலும் கடன் முழுமையாக அடைக்கப்பட்டு, அதன் மூலம் ரூ.11.11 லட்சம் வரை வட்டி சேமிக்க முடியும்.
சிலருக்கு போனஸ் வந்தாலும், வேறு செலவுகள் முன்கூட்டியே வந்து நிற்கும். சிலரால் சேமித்து ஒவ்வொரு ஆண்டும் ரூ.50 ஆயிரம் செலுத்த முடியாது. அப்படி இருக்கையில் என்ன செய்வது? அதே ரூ.40 லட்சம் வீட்டுக் கடனை எடுத்துக்கொள் வோம். 8 சதவீத வட்டி மற்றும் 20 ஆண்டுகள் கடன் காலத்தில் ஈ.எம்.ஐ. தொகையை ரூ.722 அதிகரிப்பதன் மூலம் ரூ. 2.37 லட்சம் வரை வட்டி சேமிக்க முடியும்.
அதாவது ரூ.33,458-ஐ மாதாந்திர தவணை தொகை யாக செலுத்துகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். இந்த தொகையை ரூ.34,180-ஆக உயர்த்தும்போது, கடன் காலத்தை 12 மாதங்கள் குறைக்க முடியும். அதோடு ரூ.2.37 லட்சம் வரை வட்டியை சேமிக்கலாம்.