அரசுப் பணியாளர் தேர்வுகளில் நவீன தொழில்நுட்பம்
அரசுப் பணியாளர் தேர்வுகளில் நவீன தொழில்நுட்பத்தை புகுத்துவது குறித்து சென்னையில் நடைபெறும் மாநில அரசு பணியாளர் தேர்வாணைய தலைவர்களின் நிலைக்குழு கூட்டத்தில் ஆலோசிக்கப்படுகிறது.
நிலைக்குழு கூட்டம்
மாநில அரசு பணியாளர் தேர்வாணைய தலைவர்களின் நிலைக் குழு கூட்டம் சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகையில் நேற்று தொடங்கியது. கூட்டத்துக்கு மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் டாக்டர் அஜய்குமார் தலைமை தாங்கினார்.
இதில் நிலைக்குழுவின் தேர்வாணையத் தலைவர் அலோக் வர்மா, தமிழ்நாடு மாநில அரசு பணியாளர் தேர்வாணையத்தின் (டி.என்.பி.எஸ்.சி.) தலைவர் எஸ்.கே.பிரபாகர் மற்றும் ஆந்திரா, அருணாசலப்பிரதேசம், அசாம், பீகார், இமாச்சல பிரதேசம், கர்நாடகா, மராட்டியம், நாகாலாந்து, ராஜஸ்தான், உத்தரபிரதேச மாநில அரசு பணியாளர் தேர்வாணையங்களின் தலைவர்களும், அரசு அலுவலர்களும் பங்கேற்றனர்.
நவீன தொழில்நுட்பம்
கூட்டத்தில் அரசு பணிக்கான தேர்வுகளில் உள்ள முக்கிய அம்சங்கள் குறித்த விவாதங்கள் நடைபெற உள்ளது. அதிலும் குறிப்பாக பணியாளர்களை தேர்வு செய்யும் செயல்முறைகளில் நேர்மையான, வெளிப்படைத்தன்மையினை உறுதி செய்வது, சிறந்த நடைமுறைகளை தங்களுக்குள் பகிர்ந்து கொள்வது, தேர்வு நடைமுறைகளில் நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்துவது, தேர்வு தொடர்பான வழக்குகளை மேலாண்மை செய்வது போன்ற முக்கிய அம்சங்களை பற்றி ஆலோசிக்கப்பட இருக்கிறது.
2 நாட்கள் நடைபெறும் இந்த கூட்டம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நிறைவு பெறுகிறது.
வெளிப்படைத்தன்மை
முன்னதாக இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த டி.என்.பி.எஸ்.சி. தலைவர் எஸ்.கே.பிராபகர் நிருபர்களிடம் கூறுகையில், ‘தேர்வுகளை நடத்தும் முறை, அதிலுள்ள சிரமங்கள், எப்படி அதனை மேலும் மேம்படுத்தலாம்?, இன்னும் வெளிப்படைத்தன்மையாக எப்படி நடத்தலாம்? என்று கூட்டத்தில் விவாதிக்க உள்ளோம். தமிழ்நாட்டில் டி.என்.பி.எஸ்.சி. நடத்திய கடந்த 14 தேர்வுகளை சொன்ன தேதியில் நடத்தி முடிவுகளை வெளியிட்டிருக்கிறோம். மாணவர்கள் எழுதும் ஓ.எம்.ஆர். தாள்களை எப்படி திருத்தினால் குளறுபடி இல்லாமல் இருக்கும் என்பது குறித்தும், தமிழ்நாட்டு மாணவர்கள் வெளிமாநிலங்களில் மத்திய அரசு தேர்வுகளை எழுதும்போது ஏற்படும் சிரமங்கள் குறித்தும் விவாதிக்க உள்ளோம்' என்றார்.