அரசாணைகள் மற்றும் சுற்றறிக்கைகள் அனைத்தும் இனி தமிழில் மட்டுமே இருக்க வேண்டும் தமிழக அரசு உத்தரவு - Thulirkalvi

Latest

Thursday, 17 April 2025

அரசாணைகள் மற்றும் சுற்றறிக்கைகள் அனைத்தும் இனி தமிழில் மட்டுமே இருக்க வேண்டும் தமிழக அரசு உத்தரவு

அரசாணைகள், சுற்றறிக்கைகள் தமிழில் மட்டுமே இருக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது. தமிழில் அரசாணை இதுதொடர்பாக தமிழ் வளர்ச்சி துறை அரசு செயலாளர் ராஜாராமன், அனைத்து அரசு துறை செயலாளர்களுக்கும், மாவட்ட கலெக்டர்களுக்கும் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:- 

தமிழ் ஆட்சி மொழி சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தவும், அரசு அலுவலகங்களில் அனைத்து நடவடிக்கைகளிலும் தமிழ் மொழியை பயன்படுத்தவும் பின்வரும் அறிவுறுத்தல்களை தவறாமல் பின்பற்ற வேண்டும். அந்த வகையில், அரசாணைகள் தமிழில் மட்டுமே வெளியிடப்பட வேண்டும். சுற்றறிக்கை குறிப்புகள் தமிழிலேயே இருக்க வேண்டும். துணை தலைமை அலுவலகங்களில் இருந்து அரசு மற்றும் பிற அலுவலகங்களுக்கு அனுப்பப்படும் கருத்துரைகள், தமிழிலேயே இருக்க வேண்டும். 

 தமிழில் கையெழுத்து வெளியிடப்படும் கடிதங்கள், அலுவலக ஆணைகள் மற்றும் இதர கடித போக்குவரத்துகள் ஆகியவை விலக்களிக்கப்பட்ட இனங்கள் தவிர எல்லா இனங்களிலும், தமிழில்தான் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பொது மக்களிடம் இருந்து தமிழில் வருகின்ற கடிதங்களுக்கு தமிழிலேயே பதில் எழுதுவதுமில்லாது அது குறித்த குறிப்புகள் தமிழிலேயே இருக்க வேண்டும். அரசு பணியாளர்கள் அனைத்து ஆவணங்களிலும் தமிழில் மட்டுமே கையொப்பமிட வேண்டும். 

ஆங்கிலத்தில் வெளியிடப்படும் அரசாணைகளை, தமிழில் வெளியிடுவதற்கு ஏதுவாக தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறையின் மொழி பெயர்ப்பு பிரிவு மூலம் தமிழாக்கம் செய்வதற்கு அனுப்பி வைக்கவும் அல்லது அந்தந்த துறைகளாலேயே தமிழில் மொழி பெயர்க்கப்படும் அரசாணைகளை தேவை இருப்பின் கூர்ந்தாய்வு செய்யும் பொருட்டு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறையின் மொழி பெயர்ப்பு பிரிவுக்கு அனுப்பி வைக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment