பிளஸ்-2 பொதுத்தேர்வில்
‘ஆப்சென்ட்' எண்ணிக்கையை குறைக்க பள்ளிக்கல்வித்துறை தீவிர நடவடிக்கை
‘வரும் தேர்வில் நிச்சயம் பிரதிபலிக்கும்' என அதிகாரிகள் தகவல்
பிளஸ்-2 பொதுத்தேர்வில் ‘ஆப்சென்ட்' எண்ணிக்கையை குறைக்க பள்ளிக்கல்வித் துறை தீவிரமாக நடவடிக்கை எடுத்து வருகிறது. இது வரும் தேர்வில் நிச்சயம் பிரதிபலிக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
‘ஆப்சென்ட்’ விவகாரம்
பிளஸ்-2 வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் நடைபெறும். உயர்கல்விக்கு செல்வதற்கான நுழைவுக்கதவு பிளஸ்-2 பொதுத் தேர்வு என்பதால், மாணவ-மாணவிகள் அதிக கவனமுடன் இந்த தேர்வை எதிர்கொள்வார்கள்.
தமிழ்நாட்டை பொறுத்தவரையில், பிளஸ்-2 பொதுத் தேர்வை சுமார் 8 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் எழுதி வருகிறார்கள். இது சில ஆண்டுகளில் அதிகரிக்கவும், குறையவும் செய்யும்.
அவ்வாறு தேர்வு எழுதும் மாணவ-மாணவிகளில் சிலர் இந்த தேர்வை எழுத வராமல் ‘‘ஆப்சென்ட்'' ஆகும் விவகாரம் பள்ளிக்கல்வித் துறைக்கு தொடர்ந்து தலைவலியை கொடுத்து வருகிறது.
50,674 பேர்
கடந்த 2022-23-ம் கல்வியாண்டுக்கான பிளஸ்-2 பொதுத்தேர்வு 2024-ம் ஆண்டு மார்ச் மாதம் நடந்தது. இந்த தேர்வை 8 லட்சத்து 51 ஆயிரம் மாணவ-மாணவிகள் எழுத விண்ணப்பித்திருந்த நிலையில், அவர்களில் மொழிப் பாடத் தேர்வை அதாவது தமிழ்த் தேர்வை 50 ஆயிரத்து 674 பேர் எழுதாதது பேரதிர்ச்சியை கொடுத்தது.
கொரோனா நோய்த் தொற்று பாதிப்புக்கு பிறகு, ஓரளவுக்கு சகஜ நிலைக்கு திரும்பியதும் நடந்த இந்த தேர்வில், இவ்வளவு பேர் ‘ஆப்சென்ட்' ஆனது ஒரு காரணமாக சொல்லப்பட்டாலும், இதுவரை இல்லாத எண்ணிக்கை பள்ளிக்கல்வித் துறையையே மிரளச் செய்தது.
இதற்கு பல குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்பட்டன. அரசின் நலத்திட்டங்களை வழங்குவதற்காக கணக்கு காட்ட கல்வித்துறை இந்த புள்ளி விவரங்களை பராமரித்ததாகவும் பேசப்பட்டது. ஆனால் அந்த ஆண்டு கொரோனா தொற்று காரணமாக யாரையும் பள்ளியில் இருந்து நீக்காமல், ஒரு நாள் பள்ளிக்கு வந்திருந்தாலும் அவர்களுக்கு ஹால்டிக்கெட் வழங்கப்பட்டதன் விளைவுதான் இவ்வளவு ஆப்சென்ட்டுக்கு காரணம் எனவும் கல்வித்துறை தெரிவித்தது.
தொடர் கதையாகி வருகிறது
இதன் தொடர்ச்சியாக 2023-24-ம் ஆண்டில்7 லட்சத்து 80 ஆயிரம் மாணவ-மாணவிகள் பிளஸ்-2 தேர்வு எழுத விண்ணப்பித்திருந்த நிலையில், அந்த ஆண்டில் மொழிப் பாடத்தில் 12 ஆயிரத்து 364 பேரும், ஆங்கில பாடத்தில் 12 ஆயிரத்து 696 பேரும் தேர்வு எழுத வரவில்லை.
இதேபோல், கடந்த கல்வியாண்டில் (2024-25) 8 லட்சத்து 2 ஆயிரத்து 567 பேர் தேர்வு எழுத விண்ணப்பித்து இருந்தனர். அவர்களில் மொழிப் பாடத்தை 11 ஆயிரத்து 430 பேர் எழுதவில்லை.
இப்படியாக ஒவ்வொரு ஆண்டும் 10 ஆயிரத்துக்கு குறையாமல் மாணவ-மாணவிகள் பொதுத் தேர்வில் ஆப்சென்ட் ஆகும் நிகழ்வு தொடர் கதையாகி வருவது மறுக்க முடியாத புள்ளி விவரங்களாகிவிட்டது.
நடவடிக்கைகள்
இந்த நிலையில் 2025-26-ம் கல்வியாண்டுக்கான பிளஸ்-2 பொதுத்தேர்வு அடுத்த ஆண்டு (2026) மார்ச் 2-ந்தேதி தொடங்க உள்ளது. 8 லட்சத்து 7 ஆயிரம் மாணவ-மாணவிகள் எழுத இருக்கிறார்கள். அதற்கான தேர்வு அட்டவணையை சமீபத்தில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டார். இந்த நிலையில் நடப்பாண்டில் பொதுத்தேர்வில் ‘ஆப்சென்ட்' எண்ணிக்கை இல்லாத வகையில் பள்ளிக்கல்வித் துறை நடவடிக்கை எடுத்து வருவதாக சொல்லப்படுகிறது.
அதன்படி, முறையாக பள்ளிக்கு வந்த மாணவ-மாணவிகளின் புள்ளி விவரங்களின் அடிப்படையில் ஹால் டிக்கெட் வெளியிடுவது, மாணவ-மாணவிகளுக்கு பொதுத்தேர்வு குறித்த அச்சத்தை தவிர்க்க ஆசிரியர்கள், ஆலோசகர்களை கொண்டு அறிவுரைகள் வழங்கி அனைவரையும் தைரியமாக தேர்வை எதிர்கொள்ள செய்வது, தேர்ச்சி பெற முடியாதோ என நினைக்கக் கூடிய மாணவ-மாணவிகளுக்கு தேவையான ஆலோசனைகள் வழங்குவது போன்ற பல்வேறு நடவடிக்கைகளை பள்ளிக்கல்வித் துறை கையில் எடுத்திருக்கிறது. இது நிச்சயம் வரும் தேர்வில் பிரதிபலிக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:
Post a Comment