சுமார் 16 லட்சம் மாணவர்கள் எழுதக்கூடிய
எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 பொதுத்தேர்வு அட்டவணை எப்போது வெளியாகும்?
புதிய தகவல்கள் 
எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணை முன்கூட்டியே வெளியிடப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் சுமார் 16 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் இந்த தேர்வுகளுக்கு தயாராகும் வகையில், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. அந்தவகையில் 2025-26-ம் கல்வியாண்டுக்கான எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 பொதுத்தேர்வு அட்டவணை அக்டோபர் மாதம் இறுதிக்குள் வெளியாகும் என ஏற்கனவே சொல்லப்பட்டிருந்த நிலையில், தற்போது நவம்பர் மாதம் முதல் வாரத்துக்குள் வெளியாகலாம் என்ற புதிய தகவல்கள் வெளியாகியுள்ளது.
பொதுத்தேர்வை நடத்த இருக்கும் அரசு தேர்வுத்துறை, பொதுத்தேர்வு தொடர்பான அட்டணைகளை தயாரித்து, அதுதொடர்பாக பல்வேறு கட்ட ஆலோசனைகளை நடத்தி முடித்திருப்பதாக சொல்லப்படுகின்றன. 
அதன்படி, தயாரிக்கப்பட்ட அட்டவணை தற்போது அரசின் வசம் ஒப்படைக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
தமிழ்நாடு 2026-ல் சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள இருக்கிறது. தேர்தல் அனேகமாக ஏப்ரல் கடைசி அல்லது மே மாதத்தில் நடக்கலாம் என சொல்லப்படும் சூழலில், அதற்கேற்ப பொதுத்தேர்வு அட்டவணை தயாரிக்கப்பட்டு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அரசிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கும் இந்த அட்டவணை உறுதிசெய்யப்பட்டு, பள்ளிக்கல்வித்துறை வசம் வந்துசேரும் எனவும், அதன் பின்னர் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அட்டவணையை வெளியிடுவார் எனவும், அதன்படி, நவம்பர் 4-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) வெளியிடப்படலாம் எனவும் கல்வித்துறை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


 
 
 
 
