பள்ளிகளில் தமிழில் பெயர் பலகைகளை வைக்க வேண்டும் கல்வித் துறை உத்தரவு - Thulirkalvi

Latest

Tuesday, 10 June 2025

பள்ளிகளில் தமிழில் பெயர் பலகைகளை வைக்க வேண்டும் கல்வித் துறை உத்தரவு


தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டம், உணவு நிறுவனங்கள் சட்டம், தொழிற்சாலைகள் சட்டம் விதிகளின்படி பெயர் பலகைகளை தமிழில் வைக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது. அதாவது, தமிழ், ஆங்கிலம் மற்றும் பிறமொழிகள் முறையே 5:3:2 என்ற அளவில் இடம் பெற்று இருக்க வேண்டும். குறிப்பாக தமிழ் மொழியில் பெயர் பலகை முதன்மையாக இருக்க வேண்டும் என்பதை மையமாக வைத்து அரசு உத்தரவிட்டிருந்தது. 

அவ்வாறு பெயர் பலகை வைக்காத கடைகள், நிறுவனங்களுக்கு ரூ.100 முதல் ரூ.1 லட்சம் வரை அபராதமும் விதிக்கப்படுகிறது. இதேபோல், பள்ளிக்கல்வித் துறையின் கீழ் செயல்படும் அனைத்து அலுவலகம், பள்ளிகளின் பெயர் பலகைகளையும் மேற்படி அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி வைக்க கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது. 

அதேபோல், அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்கள் மற்றும் அரசு, அரசு உதவி பெறும் உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில், ஊராட்சி ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் அமைக்கப் பெற்றுள்ள பெயர் பலகைகள் தமிழிலேயே அமைத்திட அனைத்து அலுவலகர்களுக்கும் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தனியார் பள்ளிகள் உள்பட அனைத்து வகை பள்ளிகளை சார்ந்த நிர்வாகிகளிடம் இது சார்ந்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான விவரங்களை பெற்று கல்வித் துறைக்கு அனுப்பி வைக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.

No comments:

Post a Comment