தனியார் பள்ளிகளில் இலவச கட்டாய கல்விக்கு விரைவில் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

தனியார் பள்ளிகளில் இலவச கட்டாய கல்விக்கு விரைவில் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். 
இலவச கட்டாய கல்வி தனியார் பள்ளிகளில் அனைவருக்கும் இலவச கட்டாய கல்வி சட்டத்தின் (ஆர்.டி.இ.) கீழ் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப்பதிவு அடுத்த வாரம் தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த சட்டத்தின் படி, தனியார் பள்ளிகளில் எல்.கே.ஜி. முதல் 8-ம் வகுப்பு வரை 25 சதவீத இடங்கள் பொருளாதாரத்தில் பின்தங்கிய மற்றும் நலிவுற்ற பிரிவை சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. இவர்களுக்கான கல்விக்கட்டணத்தை அரசு வழங்கி வருகிறது. தமிழகத்தை பொறுத்தமட்டில், 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளில் இந்த சட்டத்தின் கீழ் மாணவர்கள் சேர்க்கை நடந்து வருகிறது. அதன்படி, ஆண்டுதோறும் சுமார் ஒரு லட்சத்து 10 ஆயிரம் மாணவர்கள் சேர்க்கை பெற்று வருகின்றனர். 

அடுத்த வாரம்... இதற்கிடையே, வரும் கல்வியாண்டுக்கான (2025-26) மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் அடுத்த வாரம் ஆன்லைனில் வெளியிடப்படும் என்று கூறப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ், மொழி மற்றும் மத சிறுபான்மையினர் அந்தஸ்து பெற்றுள்ள பள்ளிகளை தவிர, அனைத்து தனியார் நர்சரி, பிரைமரி, மெட்ரிக், ஐ.சி.எஸ்.இ. மற்றும் சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் இலவசமாக மாணவர் சேர்க்கை பெறமுடியும். 
இதில் சேருவதற்கான தகுதி பெற்றுள்ள பெற்றோர் வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவினை சேர்ந்தவர்களை பொறுத்தமட்டில் ஆதரவற்றவர்கள், எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்டவர், 3-ம் பாலினத்தவர், மாற்றுத்திறனாளிகள், துப்புரவுத்தொழிலாளர்களின் குழந்தைகள் ஆகியோரின் விண்ணப்பங்கள் குலுக்கல் நடத்தாமல் முன்னுரிமை அடிப்படையில் தேர்வு செய்யப்படும். அதாவது, ஒரே பள்ளிக்கு குறிப்பிட்ட எண்ணிக்கைக்கு மேல் விண்ணப்பங்கள் பெறப்பட்டால் அந்த விண்ணப்பங்கள் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படும். மேற்கண்ட பிரிவினருக்கு குலுக்கல் இல்லாமல் இடம் ஒதுக்கீடு செய்யப்படும். நலிந்த பிரிவினர்களை பொறுத்தமட்டில், ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்துக்கு குறைவாக இருக்க வேண்டும். 

ஆன்லைனில்.. விண்ணப்பதாரர்கள் வருமானம், இருப்பிடம், சாதிச் சான்றிதழ்களை சமர்ப்பிப்பது கட்டாயமாகும். சேர்க்கை விண்ணப்பங்களை https://rteadmission.tnschools.gov.in எனும் இணையதள முகவரியில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். ஒரு பெற்றோர் அதிகபட்சமாக தங்கள் இருப்பிடத்துக்கு அருகே உள்ள 5 பள்ளிகளில் விண்ணப்பிக்கலாம்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.