மாண்புமிகு உணவு
மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், இன்று
(24.02.2025) தலைமைச் செயலகத்தில் நடந்த உணவுத்துறை உயர் அலுவலர்கள் ஆய்வுக்
கூட்டத்தில் நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்படும் நெல்லினை உடனடியாக
பாதுகாப்பான இடங்களுக்கு நகர்வு செய்திட அறிவுறுத்தல்.
மாண்புமிகு உணவு மற்றும்
உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் தலைமையில் இன்று
(24.02.2025) தலைமைச் செயலகத்தில் உணவுத்துறை உயர் அலுவலர்களின் ஆய்வுக் கூட்டம்
நடைபெற்றது. இந்த ஆய்வுக்கூட்டத்தில் 2021 முதல் 2024 ஆண்டு வரை, அறிவிக்கப்பட்ட
அறிவிப்புகளின் செயலாக்கத்தைப் பற்றியும் வரும் நிதி ஆண்டிற்கான அறிவிப்புகள்
பற்றியும் கேட்டறிந்தார்.
நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் கொண்டு
வரும் நெல்லினை புகாருக்கு இடமின்றி கொள்முதல் செய்திடவும் தினசரி வானிலை
அறிக்கையினை விழிப்புடன் கேட்டறிந்து கொள்முதல் செய்யப்படும் நெல்லினை இயற்கை
சீற்றங்களால் பாதிக்கப்படாத வண்ணம் பாதுகாப்பான இடங்களுக்கு உடனுக்குடன் நகர்வு
செய்திடவும் அறிவுறுத்தினார். தேவைப்படும் இடங்களில் அரவை முகர்வகளின் ஆலைகளுக்கு
உடனடியாக கொள்முதல் செய்யப்படும் நெல்லினை இயக்கம் செய்திடவும் அறிவுறுத்தினார்.
நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல்லினை பாதுகாத்திட தேவையான அளவு தார்பாலின்.
கற்கள் மற்றும் கட்டைகள் இருப்பு வைத்திடவும் அறிவுறுத்தினார்.
தேவைக்கேற்ப வட்ட
செயல்முறை கிடங்குகள், நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மேற்கூரையுடன் கூடிய நெல்
சேமிப்புத் தளங்கள் கட்டிட இடங்களை தேர்வு செய்திடுமாறு அறிவுறுத்தினார்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின் படி ஒவ்வொரு நெல் கொள்முதல்
நிலையத்திலும் நாளொன்றுக்கு 1000 மூட்டைகள் (40 கிலோ) கொள்முதல் செய்திடவும், நெல்
கொள்முதல் நிலையங்களில் அதிகமான நெல் வரத்து இருந்தால், இரண்டு இயந்திரங்கள் வைத்து
நெல் கொள்முதல் செய்திடவும் அறிவுறுத்தினார். பொது விநியோகத்திட்ட நியாய
விலைக்கடைகளில் குடும்ப அட்டைதாரர்களிடம் கனிவான முறையில் சேவை
செய்திடவும்அனைத்துப் பொருட்களையும் நல்ல தரத்துடன் ஒரே நேரத்தில் வழங்கிடவும்
குடும்ப அட்டைதாரர்களுக்கு விநியோகிக்கப்டும் பொருட்களின் எடை சரியாக இருப்பதையும்
ஆய்வு அலுவலர்கள் உறுதி செய்திட அறிவுரைகள் வழங்கினார்.
மாநில எல்லையோரங்களில்
அரிசிக் கடத்தலைத் தடுத்திட கண்காணிப்புப் பணியைத் தீவிரப்படுத்திடவும், அண்டை
மாநில அதிகாரிகளுடன் இணைந்து கலந்தாய்வு கூட்டங்கள் நடத்திடவும் குடிமைப்பொருள்
குற்றப் புலனாய்வுத்துறையின் அலுவலர்களைக் கேட்டுக் கொண்டார். காவல்துறை தமிழ்நாடு
சேமிப்புக் கிடங்கு நிறுவனத்தின் பயன்பாட்டை அதிகரித்து விவசாயிகளுக்கும்
வணிகர்களுக்கும் மேம்பட்ட சேவைகளை வழங்கி நிறுவனத்தின் வருமானத்தை உயர்த்திட
அறிவுரை வழங்கினார்.
இந்த ஆய்வுக்கூட்டத்தில், தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு நிறுவன
நிர்வாக இயக்குநர் திரு.சு.பழனிசாமி, இ.ஆ.ப., தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக
நிர்வாக இயக்குநர் திரு.அ.சண்முகசுந்தரம், இ.ஆ.ப., குடிமைப்பொருள் வழங்கல்
குற்றப்புலனாய்வுத்துறை காவல்துறைத் தலைவர் திரு.ரூபேஷ் குமார் மீனா, இ.கா.ப
மற்றும் துறையின் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

No comments:
Post a Comment