எடையைக் குறைக்க விரும்புகிறவர்களின் கவனத்துக்கு - Thulirkalvi

Latest

Saturday 12 November 2022

எடையைக் குறைக்க விரும்புகிறவர்களின் கவனத்துக்கு

எடையைக் குறைக்க விரும்புகிறவர்களின் கவனத்துக்குஎடை குறைக்க விரும்புகிறவர்கள் முதல் வேலையாக கை வைப்பது உணவு விஷயத்தில்தான். உணவைத் தவிர்த்தாலோ அல்லது அளவைக் குறைத்தாலோ எடையைக் குறைத்து விடலாம் என்று பலரும் நம்புகிறார்கள். ஆனால், போதுமான அளவில் உணவை உட்கொள்ளாதபோது கீட்டோசிஸ் என்ற மோசமான நிலை உருவாகும் என்கிறார்கள் மருத்துவர்கள்.

 இந்த கீட்டோசிஸ் என்பது என்ன? இதே பெயரில் பிரபலமாக இருக்கும் கீட்டோஜெனிக் உணவு என்பது என்ன? ஊட்டச்சத்து நிபுணர் கிரேட்டா ஷெரின் அவர்கள் கூறியது ... நாம் உண்ணும் அரிசி போன்ற உணவுகள் செரிமானம் அடைந்த பிறகு அதிலுள்ள மாவுச்சத்து என்று சொல்லப்படுகிற கார்போஹைட்ரேட்டில் இருந்து உடலுக்குத் தேவையான ஆற்றல் கிடைக்கிறது. 

இந்த மாவுச்சத்தானது கல்லீரலில் குளுக்கோஸாக மாற்றப்பட்டு உடலுக்குத் தேவையான முதன்மை ஆற்றலைக் கொடுக்கிறது. நாம் சில நேரங்களில் உணவு உட்கொள்ளாமல் இருக்கும்போது அல்லது மன அழுத்தத்தில் இருக்கும்போது உடலுக்குத் தேவையான ஆற்றலைக் கொடுக்கும் மாவுச்சத்து இல்லாமல் போய்விடும். இந்த சூழலில் உடலில் உள்ள கொழுப்புச்சத்து கல்லீரலில் கீட்டோன்களாக மாறி நமக்கு ஆற்றலைக் கொடுக்கிறது. இந்த வளர்சிதை மாற்ற செயல்முறைக்கு கீட்டோஸிஸ்(Ketosis) என்று பெயர். இப்படி ரத்தத்தில் உருவாகும் கீட்டோன்கள் அமிலத்தன்மை உடையவை. இவை சிறுநீரின் வழியே வெளியேற்றப்படுகின்றன.

 ரத்தத்தில் அளவுக்கு அதிகமாகும் கீட்டோன்கள் உடலை விஷமாக்கும் இயல்புடையது. இதற்கு கீட்டோஅசிடோஸிஸ் (Ketoacidosis) என்று பெயர். உயர் கீட்டோன் அளவுகள் நீரிழிவு கீட்டோஅசிடோஸிஸாக மாறி நம்மை கோமா அல்லது மரண நிலைக்குக் கொண்டு செல்லலாம். ரத்தத்தில் கீட்டோன்கள் 0.6 முதல் 1.5 mmol/liter என்ற அளவில் இருப்பது நடுநிலையானது. 0.6 mmol/liter என்ற அளவுக்குக் குறைவாக இருந்தால் கீட்டோன்கள் மிகவும் குறைவாக இருப்பதைக் குறிக்கிறது. 

இதன் அளவு 1.6 முதல் 3.0 mmol/liter என்ற அளவில் இருப்பதை நீரிழிவு கீட்டோஅசிடோஸிஸ் என்று சொல்கிறோம். கீட்டோஅசிடோஸிஸ் அறிகுறிகள்.. சிறுநீரில் கீட்டோன் அளவு அதிகமாக இருப்பது, அடிக்கடி சிறுநீர் கழித்தல், தாகம் அல்லது நாக்கு வறண்டுபோதல், குமட்டல், உடல் வறட்சி, சுவாச கோளாறு, பழ வாசனை நிறைந்த சுவாசம் மற்றும் குழப்ப சூழ்நிலை போன்றவை இதன் அறிகுறிகள். இதை தடுப்பது எப்படி? ரத்த சர்க்கரை அளவை தவறாமல் பரிசோதித்துப் பார்க்க வேண்டும். உயர் ரத்த சர்க்கரை மற்றும் அதிக கீட்டோன்கள் இருந்தால் உடற்பயிற்சி செய்ய வேண்டாம். உடலில் உள்ள கீட்டோன்கள் வெளியேறுவதற்கு அதிகளவு தண்ணீர் குடிக்க வேண்டும். ஆரோக்கியமான உணவு முறையை மேற்கொள்ள வேண்டும். பட்டினி கிடக்கக் கூடாது. எடை குறைப்பு முயற்சி என்றும் உணவைத் தவிர்க்கக் கூடாது.

 உடலில் ஏற்படும் நீரிழப்பு மற்றும் உடலில் உள்ள எலக்ட்ரோலைட்டுகளின் (Electrolite) அளவை சரி செய்ய Intravenous திரவங்களை(IV Fluids) செலுத்த வேண்டும். கீட்டோன்களைக் கட்டுப்படுத்த இன்சுலின் செலுத்த வேண்டும். மேற்கண்ட அறிகுறிகள் தென்பட்டால் உங்கள் மருத்துவர் அல்லது ஊட்டச்சத்து நிபுணரை அணுகி உரிய பரிசோதனையும், சிகிச்சையும் மேற்கொள்வதன் மூலம் இந்த பிரச்னையைத் தடுக்கலாம். கீட்டோஜெனிக் உணவுமுறை என்பது... Ketogenic diet 1920-களில் கை-கால் வலிப்பு நோயைக் கட்டுப்படுத்துவதற்கு கொடுக்கப்பட்ட சிகிச்சை உணவுமுறையாக இருந்தது. இந்த உணவுமுறையில் கொழுப்புச்சத்து அதிகமாகவும், மாவுச்சத்து குறைவாகவும், புரதச்சத்து சராசரி நிலையிலும் காணப்படும். அதாவது கொழுப்புச்சத்து 75%, மாவுச்சத்து 5%, புரதச்சத்து 20% என்ற அளவில் இருக்கும். இந்த உணவு முறையில் இறைச்சி, மீன், முட்டை, வெண்ணெய், க்ரீம், பாலாடைக்கட்டி, கொட்டைகள், தேங்காய் எண்ணெய், ஆலிவ் எண்ணெய், அவகேடோ எண்ணெய், குறைந்த மாவுச்சத்துள்ள காய்கறிகள், குறைந்த இனிப்புச்சத்துள்ள பழங்கள், டார்க் சாக்லேட் மற்றும் க்ரீக் யோகர்ட் போன்றவை எடுத்துக் கொள்ளப்படுகிறது. 

 இந்த உணவு முறையில் நார்ச்சத்துள்ள உணவுப் பொருட்கள் மிகவும் குறைவாக எடுத்துக் கொள்ளப்படுகிறது. சர்க்கரை, தானிய வகைகள், பீன்ஸ் மற்றும் கேரட், உருளை, பீட்ரூட் போன்ற வேர் காய்கறிகள், சுவையூட்டிகள் போன்றவற்றை இந்த உணவுமுறையில் உட்கொள்ளக்கூடாது. மருத்துவ சிகிச்சையில் கீட்டோஜெனிக் உணவு முறை... 1.இதன் மூலம் வலிப்பு நோயின் தாக்கம்(Epileptic seizures) வெகுவாக குறைந்து பின்பு முழுமையாக நின்றுவிட வாய்ப்புள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

 2.PFK குறைபாடு (Phospho fructo kinase deficiency) என்று சொல்லப்படுகிற வளர்சிதை மாற்றக் குறைபாடுள்ள நபர்கள் இந்த உணவு முறையைப் பின்பற்றிய பிறகு, தசைகள் வலுப்பெற்று நல்ல முன்னேற்றம் காணப்பட்டதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 3.இந்த உணவு முறையால் உடலில் உள்ள லாக்டிக் அமிலம் குறைவதால் புற்றுநோய்க் கட்டியின் (Malignancy) வளர்ச்சியைக் கட்டுப்படுத்த பெரிதும் உதவுகிறது. 4.இந்த உணவு முறை மைக்ரோகாண்டியல் ஆற்றலை மேம்படுத்துவதால் Multiple sclerosis, பார்கின்சன், அல்சைமர் போன்ற Neuro degenerative நோய்களைக் குறைக்கிறது. 5.சில ஆட்டிஸம் பாதிப்புள்ள குழந்தைகளுக்கு ஒரு வகையான கீட்டோஜெனிக் உணவு முறையைப் பின்பற்றியபோது, அவர்கள் நன்கு செயல்படுகிறவர்களாவும், சிறந்த முறையில் பதிலளிக்கிறவர்களாவும் காணப்பட்டனர் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

 கீட்டோஜெனிக் உணவு முறையில் உடல் பருமனைக் குறைத்தல்உடலின் தினசரி ஆற்றல் தேவைக்குரிய மாவுச்சத்து மற்றும் கொழுப்புச் சத்தினை குறைவாக எடுத்துக் கொள்கிறபோது, நமது உடல் தனக்குள் சேமித்து வைத்திருக்கும் கொழுப்பினை ஆற்றலாக மாற்ற உந்தப்படுகிறது. இது உடல் பருமனைக் குறைக்க உதவுகிறது. இது ரத்த குளுக்கோஸின் அளவில் வீழ்ச்சியை ஏற்படுத்துகிறது. இதன் விளைவாக லிபோலிசிஸ் (Lipolysis) என்று சொல்லப்படுகிற கொழுப்புச்சத்து ஆற்றலாக மாறக்கூடிய செயல்முறை நிகழ்கிறது. இதில் அதிகளவு புரதச்சத்தினை எடுத்துக்கொள்வதால் பசி உண்டாகும் தன்மையைக் குறைக்கிறது. 

 நாம் உணவு உண்பதற்கு முன் நமது மூளையில், பசி ஏற்படுவதை உணர்த்தும் பணியை வயிற்றில் சுரக்கும் Ghrelin என்கிற ஹார்மோன் செய்வதால் அதை பசியைத் தூண்டும் ஹார்மோன் என்கிறோம். நமது உடலில் கொழுப்பு செல்கள் அதிகரிக்கும்போது Leptin என்கிற ஹார்மோன் அளவு அதிகரித்து, மூளைக்கு சாப்பிடுவதை நிறுத்தும்படியான உணர்வைத் தருகிறது. எனவே, இதை பசியை அடக்கும் ஹார்மோன் என்று சொல்கிறோம். இது உடல் பருமன் குறைய உதவுகிறது. 

இந்த வகை உடல் பருமன் குறைவு முதலில் உடலில் உள்ள நீர் அளவினைக் குறைத்து அதன்பின்பு உடல் கொழுப்பைக் குறைக்கிறது. இந்த உணவு முறை சுவாசக் குறியீட்டைக் (Resting Respiratory Quotient) குறைக்கிறது. எனவே, அதிக கொழுப்புச் சத்தினை உட்கொள்கிறபொழுது அதிக வளர்சிதை மாற்ற செயல்திறனைக் கொண்டுள்ளது. கீட்டோஜெனிக் உணவு முறையின் பக்க விளைவுகள்... புரதச்சத்துள்ள உணவுகளை அதிகம் உட்கொள்வதால் உடற்பயிற்சியின்போது அதிகளவில் அமோனியா உற்பத்தியாகிறது. சோர்வு, எரிச்சல், மலச்சிக்கல், செரிமான பிரச்னைகள், சிறுநீரக பிரச்னைகள், மூளையின் மந்தநிலை (Brain fog), வைட்டமின் மற்றும் தாதுச்சத்து குறைபாடு போன்றவை உண்டாகிறது. 

அதிகளவு சிறுநீர் வெளியேறுவதால் உடலில் நீர் அளவு குறைந்து நீர்வறட்சி (Dehydration) ஏற்படுகிறது. ஆரோக்கியமற்ற கொழுப்புச்சத்து சேர்வதால் உடலில் எதிர்மறை விளைவுகள் ஏற்படும். விரைவாக உடல் பருமன் குறையும் என்பதற்காக மட்டுமே இந்த உணவுமுறையைப் பின்பற்றுவது சரியல்ல. ஏனென்றால் உடல் எடையானது படிப்படியாக சரியான முறையில் குறைவதே ஆரோக்கியமானதாக இருக்கும். கீட்டோஜெனிக் உணவுமுறையைப் பின்பற்றுவது எப்படி? கீட்டோஜெனிக் உணவு முறை தனித்துவமானது. இது ஒவ்வொரு நபரின் உடல் நிலைகளுக்கு ஏற்றவாறு பரிந்துரை செய்யப்படுகிறது. எனவே, கீட்டோஜெனிக் டயட்டினைப் பின்பற்ற விரும்புகிறவர்கள் உணவியல் நிபுணர் மற்றும் மருத்துவரின் தொடர் ஆலோசனைகளைப் பெறுவது அவசியம். இந்த முறையில் உணவு உட்கொள்வதற்கு முன்னும், பின்னும் ரத்த பரிசோதனை செய்ய வேண்டும். இம்முறையில் மல்டி வைட்டமின் மற்றும் மல்டி மினரல் எடுக்க வேண்டும். நீர் மற்றும் மினரல் அளவுகளில் மாற்றம் ஏற்படுவதால் தேவையான அளவு உப்பு எடுத்துக்கொள்ள வேண்டும். 

 இது நீரிழிவு நோயாளிகளுக்கு இன்சுலின் உணர்திறனை மேம்படுத்துவதால் உடல் பருமன் குறைய உதவுகிறது. மேலும் இந்த உணவு முறையில் சில கட்டுப்பாடுகள் இருப்பதால் இது பொதுவான உடல் பருமன் குறைக்கும் உணவு முறை அல்ல என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். ஊட்டச்சத்து அல்லது உணவியல் நிபுணர் மற்றும் மருத்துவரின் வழிகாட்டுதல்படி பரிசோதனைகள் மேற்கொண்டு இந்த உணவுமுறையைப் பின்பற்ற வேண்டும்..

No comments:

Post a Comment