மாநில கல்விக்கொள்கையை பின்பற்றி புதிய பாடத்திட்டங்களை உருவாக்க உயர்மட்டக்குழு பள்ளிக்கல்வித்துறை தகவல் - Thulirkalvi

Latest

Thursday, 6 November 2025

மாநில கல்விக்கொள்கையை பின்பற்றி புதிய பாடத்திட்டங்களை உருவாக்க உயர்மட்டக்குழு பள்ளிக்கல்வித்துறை தகவல்

மாநில கல்விக்கொள்கையை பின்பற்றி புதிய பாடத்திட்டங்களை உருவாக்க உயர்மட்டக்குழு பள்ளிக்கல்வித்துறை தகவல் 

மாநில கல்விக்கொள்கையை பின்பற்றி பாடத்திட்டங்களை மாற்றுவது, புதிய பாடத்திட்டங்களை உருவாக்குவது குறித்து முடிவெடுக்க உயர்மட்டக்குழுவை அமைத்து பள்ளிக்கல்வித்துறை அரசாணை வெளியிட்டிருக்கிறது. மாநில 

கல்விக்கொள்கை 

மத்திய அரசின் தேசிய கல்விக்கொள்கையை எதிர்த்து குரல் கொடுத்து வந்ததோடு, அதனை ஏற்கவும் மறுத்த தமிழக அரசு, தனக்கென தனியாக மாநில கல்விக்கொள்கை-2025-ஐ வடிவமைத்து சமீபத்தில் வெளியிட்டு இருந்தது. இந்தநிலையில் அந்த கல்விக்கொள்கையை பின்பற்றி தற்போது பாடத்திட்டங்களை மாற்றி அமைக்கவும், புதிய பாடத்திட்டங்களை உருவாக்கவும் பள்ளிக்கல்வித் துறை திட்டமிட்டிருக்கிறது. இதுதொடர்பாக முடிவெடுக்க ஏதுவாக முதற்கட்டமாக குழுவை அமைத்து பள்ளிக்கல்வித்துறை அரசாணையாக வெளியிட்டு உள்ளது. 

உயர்மட்டக்குழு 

பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் டாக்டர் பி.சந்திரமோகன் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறி இருப்பதாவது:- புதிய கல்விக்கொள்கை தொடர்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய சீர்திருத்த நடவடிக்கைகள் குறித்த பரிந்துரைகளை கலந்து ஆலோசித்து இறுதி செய்திடும் வகையில், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் தலைமையில் உயர்மட்டக்குழு அமைக்கப்பட்டு இருக்கிறது. இந்த குழுவில், பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் துணைத் தலைவராகவும், பெங்களூரு இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவன தலைவர் நாராயணன், கணிதவியல் வல்லுனர் ராமானுஜம், கல்வியாளர் மாடசாமி உள்ளிட்ட 13 பேர் உறுப்பினராகவும், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனர் உறுப்பினர் செயலாளராகவும் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார். 

 பாட வல்லுனர்கள் குழு 

 இதேபோல், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர், கல்வியாளர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரின் கல்விசார் கருத்துகளையும் பெற்றும் தமிழ்நாடு மாநில கல்விக்கொள்கையின் அடிப்படையில் தமிழ்நாடு பள்ளிக்கல்விக்கென்று புதிய கலைத்திட்ட வடிவமைப்பதற்கான பரிந்துரைகள் மற்றும் வரைவுப் பாடத்திட்டம் ஆகியவற்றை உருவாக்கி உயர்மட்டக்குழுவுக்கு பரிசீலனை செய்ய பாட வல்லுனர்கள் அடங்கிய குழுவையும் அமைத்து பள்ளிக்கல்வித் துறை அரசாணையாக வெளியிட்டுள்ளது. மாநில திட்டக்குழு உறுப்பினர் சுல்தான் அகமது இஸ்மாயில் இந்த குழுவின் தலைவராகவும், உறுப்பினர்களாக வரலாறு மற்றும் தொல்லியல் வல்லுனர் கா.ராஜன், இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவன அறிவியலாளர் வெங்கடேஷ்வரன், இயற்பியல் வல்லுனர் ரீட்டா ஜான், தமிழ் வல்லுனர் சுதந்திரமுத்து உள்ளிட்ட 14 பேரும், அலுவல் சாரா உறுப்பினர்களாக 3 பேரும் அந்த குழுவில் இடம்பெற்றிருக்கின்றனர். 

 2017-ல் மாற்றம் செய்யப்பட்டது 

ஏற்கனவே பாடத்திட்டங்கள் கடந்த 2017-18-ம் ஆண்டில் மாற்றி அமைக்கப்பட்டது. அதன் பின்னர் தற்போது மாற்றி அமைக்க திட்டமிட்டு, அதற்காக குழுவும் அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த குழு எடுக்கும் நடவடிக்கைகள் அடிப்படையில், 1 முதல் 8 வரையிலான வகுப்புகளுக்கு பாடத்திட்டங்கள் 2026-27-ம் கல்வியாண்டுக்குள் மாற்றி அமைத்து நடைமுறைக்கு கொண்டுவர திட்டமிட்டு இருப்பதாகவும், அதனைத்தொடர்ந்து 9 முதல் பிளஸ்-2 வரையிலான வகுப்புகளுக்கு அடுத்து வரும் கல்வியாண்டிலும் செயல்படுத்த முடிவு செய்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

No comments:

Post a Comment