ரஷ்யா தலைநகர் மாஸ்கோவில் நடைபெற உள்ள இந்திய விழாவில் கலை நிகழ்ச்சி வழங்க கலை பண்பாட்டுத்துறை சார்பில் செல்லும் 20 கலைஞர்களுக்கு மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் திரு.மு.பெ.சாமிநாதன் அவர்கள் வாழ்த்து
தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத்துறையின் கீழ் கலைக்கல்வி அளிக்கும் நோக்கில் இசைக்கல்லூரிகள், கவின் கலைக்கல்லூரிகள், சிற்பக்கல்லூரி, மாவட்ட அரசு இசைப்பள்ளிகள்,அரசின் பகுதி நேர கலை பயிற்சி மையங்கள். ஜவகர் சிறுவர் மன்றங்கள் செயல்படுகின்றன. இத்துறையின் சார்பில் நிகழ்த்துக்கலை மற்றும் கவின் கலையில் ஈடுபட்டுள்ள கலைஞர்களுக்கு கலை நிகழ்ச்சி நடத்துவதற்கும், கண்காட்சிகள் போன்றவை நடத்துவதற்கும் வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன.
கலை பண்பாட்டுத்துறை, செவ்வியல் மற்றும் கிராமியக்கலைகளைத் தொழிலாகக் கொண்டுள்ள கலைஞர்களுக்கு மாவட்ட, மாநில, வெளிமாநில நிகழ்ச்சிகள் வழங்குவதோடு அயல்நாடுகளில் கலை பரிமாற்றத்திட்டத்தின் கீழ் இந்தியாவிற்கு வெளியிலும் கலை நிகழ்ச்சி வாய்ப்புகள் வழங்கி கலையினை வளர்த்து வருகிறது. இவ்வகையில் ரஷ்யா நாட்டின் இந்திய தூதரகம் மாஸ்கோவில் நடைபெறும் மாபெரும் இந்திய கோடை விழாவினை ஜீலை 05 முதல் 13 வரை நடத்துகிறது. இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலக்கலைஞர்கள் கலந்துக் கொண்டு கலை நிகழ்ச்சிகள் வழங்க உள்ளனர்.
தமிழ்நாட்டின் சார்பில் ஜீலை 5 அன்று தொடக்க விழாவிலும் ஜீலை 6 அன்றும் தமிழிசை. பரதநாட்டியம், தெருக்கூத்து மற்றும் தோல்பாவைக்கூத்து நிகழ்ச்சிகளை 20 கலைஞர்கள் நடத்துக்கின்றனர். திருபுவனம் ஆத்மநாதன் குழுவினர் தமிழிசை நிகழ்ச்சியும், சென்னை சாய்கிருபா குழுவினர் பரதநாட்டிய நிகழ்ச்சியும். காஞ்சிபுரம், திருவள்ளுர், இராணிபேட்டை மற்றும் சேலம் பகுதிகளை சேர்ந்த தெருக்கூத்து கலைஞர்கள், கன்னியாகுமரி மாவட்டம் தோவாளையினைச் சேர்ந்த கலைமாமணி முத்துசந்திரன் குழுவினர் தோல்பாவைக்கூத்து நிகழ்ச்சி நடத்துகின்றனர். கலை பண்பாட்டுத்துறையின் தஞ்சாவூர் மண்டல உதவி இயக்குநர் திரு.செந்தில் குமார் ஒருங்கிணைப்பு பணிகளுக்காக உடன் செல்கிறார்.
ரஷ்யா செல்லும் கலைக்குழுவினர் மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் திரு. மு.பெ.சாமிநாதன் அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றனர். இந்நிகழ்ச்சியில் சுற்றுலா. பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறையின் அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் மருத்துவர் க.மணிவாசன் இ.ஆ.ப., கலை பண்பாட்டுத்துறை இயக்குநர் (மு.கூ.பொ) திருமதி கவிதா ராமு இ.ஆ.ப.. கலை பண்பாட்டுத்துறை இணை இயக்குநர் செல்வி சி.கீதா ஆகியோர் உடனிருந்தனர்.