தினமும் 8 டம்ளர் தண்ணீர் குடித்தால் போதுமா?

0 rajkalviplus
தினமும் 8 டம்ளர் தண்ணீர் குடித்தால் போதுமா?
Thanks to Meta AI

உடல் நலனை பேணுவதற்கு தினமும் 8 டம்ளர் தண்ணீர் பருக வேண்டும் என்பது நெடுங்காலமாக வழக்கத்தில் இருக்கிறது. அப்படி 8 டம்ளர் தண்ணீர் மட்டும் பருகினால் போதுமானதா? என்ற கேள்விக்கு அது ஒரு கட்டுக்கதை என்கிறார், டாக்டர் சிரியாக் அபி பிலிப்ஸ். கேரள மாநிலம் கோட்டயத்தை சேர்ந்த இவர் கல்லீரல் நோய் நிபுணர். கல்லீரல் டாக்டர் என்றும் அழைக்கப்படும் இவர், தினமும் உடலில் ஏற்படும் திரவ இழப்பை ஈடு செய்வதற்கு ஏதுவாக தண்ணீர் பருக வேண்டும் என்றும் கூறுகிறார். உடல் தினமும் எவ்வளவு திரவ இழப்பை சந்திக்கிறது? அதற்கான காரணம் என்ன? தினமும் எவ்வளவு தண்ணீர் பருக வேண்டும்? என்பது பற்றி விளக்கி இருக்கிறார். அது பற்றி பார்ப்போம். 

எவ்வளவு தண்ணீர் உட்கொள்ள வேண்டும்? 

நீரிழப்பைத் தவிர்க்க குறைந்தபட்சம் ஒன்றரை லிட்டர் (பானங்கள் மற்றும் தண்ணீர் உட்பட) திரவம் உட்கொள்ள வேண்டும். இந்த நீரில் சுமார் 20 சதவீதம் உண்ணும் உணவில் உள்ள ஈரப்பதத்தில் இருந்து கிடைக்கும். இந்த அளவு உணவை பொறுத்து மாறுபடும். பழங்கள் மற்றும் காய்கறிகளில் அதிக நீர் உள்ளடங்கி இருக்கும். இறைச்சிகளில் மிதமான நீர் கலந்திருக்கும். பதப்படுத்தப்பட்ட, வேகவைத்த பொருட்களில் குறைவான அளவில் நீர் இருக்கும். ஒன்றரை லிட்டர் என்பது குறைந்தபட்ச அளவுதான். அவரவர் உடலமைப்பு, நீரிழப்புக்கு ஏற்ப தண்ணீர் பருகும் அளவு மாறுபடும். வெப்பம்-உடல் செயல்பாடு: கடுமையான வெப்பம் மற்றும் கடின உடலுழைப்பு காரணமாக உடலில் இருந்து வியர்வை வெளிப்படுவதுண்டு. இந்த வியர்வை ஒரு மணி நேரத்திற்கு 300 மி.லி. முதல் 2 லிட்டர் வரை உடலில் திரவ இழப்பை ஏற்படுத்தக்கூடும். உடற்பயிற்சியினால் ஏற்படும் நீரிழப்பை தடுக்க ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 400 மி.லி. முதல் 800 மி.லி. திரவ பானங்களை பருகுமாறு அமெரிக்க விளையாட்டு மருத்துவக்கல்லூரி பரிந்துரை செய்துள்ளது. குழந்தைகள்: வயது மற்றும் உடல் செயல்பாட்டை பொறுத்து குழந்தைகளுக்கு நீரின் தேவை மாறுபடும். 2 முதல் 3 வயதுக்குட்பட்ட குழந்தைகள் ஒரு நாளைக்கு சுமார் 1.3 லிட்டர் தண்ணீரும், 4 முதல் 8 வயதுக்குட்பட்ட குழந்தைகள் 1.6 லிட்டர் தண்ணீரும் பருக வேண்டும். மற்றவர்கள்: குழந்தைகளை தவிர்த்து மற்றவர்கள் ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் ஒன்றரை லிட்டர் முதல் 3 லிட்டர் தண்ணீர் பருக வேண்டும். தாக உணர்வு, சிறுநீரக செயல்பாடுகளை பொறுத்து இந்த அளவு மாறுபடும். 

நீரேற்ற திட்டம் 

மிதமான வானிலை நிலவும் சூழலில் ஒரு நாளைக்கு சுமார் 1.5 லிட்டர் (தண்ணீர், பானங்கள் மற்றும் உணவில் கலந்திருக்கும் ஈரப்பதம்) உட்கொள்வது போதுமானது. மற்ற சமயங்களில் ஒரு நாளைக்கு 2 முதல் 4 லிட்டர் வரை தண்ணீர் பருகலாம். அதே நேரத்தில் கடுமையான உடற்பயிற்சியோ, உடல் உழைப்போ மேற்கொள்பவர்கள் ஒரு நாளைக்கு 6 முதல் 7 லிட்டர் வரை பருகலாம். கடுமையான வெயில், அதிக வியர்வை வெளியேற்றம் போன்ற சமயங்களில் 10 லிட்டர் தண்ணீர் வரை பருக வேண்டியிருக்கும். மருத்துவரின் ஆலோசனை பெற்று தண்ணீர் பருகுவது நல்லது. உடல் எவ்வளவு தண்ணீரை இழக்கிறது? நாம் ஓய்வெடுக்கும்போது கூட உடல் தொடர்ந்து நீரிழப்புக்கு ஆளாகிக் கொண்டுதான் இருக்கிறது. 20 முதல் 25 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் வசிக்கும்ஆரோக்கியமான நபர் தினமும் சிறுநீர் வழியாக தினமும் சுமார் 500 மி.லி. திரவ இழப்பை எதிர்கொள்கிறார். சுவாசம் மற்றும் சருமத்தில் இருந்து ஆவியாதல் செயல்முறை மூலம் கூட சுமார் 700 மி.லி. நீரை இழக்கிறார். ஒட்டுமொத்தமாக சிறுநீர் கழித்தல், வியர்த்தல், சுவாசித்தல் மற்றும் குடல் அசைவுகள் போன்ற பல்வேறு செயல்முறைகள் மூலம் மனித உடல் ஒரு நாளைக்கு சுமார் 2 லிட்டர் முதல் 3 லிட்டர் தண்ணீரை இழக்கிறது. இது வெப்பமான காலநிலையிலோ, கடுமையான உடற்பயிற்சியின்போதோ அதிகரிக்கக்கூடும். 

சிறுநீரகங்களின் செயல்பாடு 

ஆரோக்கியமான சிறுநீரகங்கள் ஒரு மணி நேரத்திற்கு சுமார் 800 மி.லி. முதல் ஒரு லிட்டர் சிறுநீரை வெளியேற்றும் திறன் கொண்டது. அதற்காக ஒரு மணி நேரத்திற்கு ஒரு லிட்டர் என்ற அளவில் தண்ணீர் பருகுவது ஆபத்தானது. அப்படி அதிகமாக தண்ணீர் பருகுவது ரத்தத்தில் சோடியத்தை நீர்த்து போகச் செய்து ஹைபோநெட்ரீமியா எனப்படும் சோடியம் குறைபாடு சார்ந்த நோய் பாதிப்பை ஏற்படுத்திவிடும். 

நீரேற்றமாக இருப்பது எப்படி? 

8 டம்ளர் தண்ணீர் பருக வேண்டும் என்பதை மறந்துவிடுங்கள். அதற்கு பதிலாக உடலின் சமிக்ஞைகளை கவனியுங்கள். சிறுநீர் தெளிவாகவோ அல்லது வெளிர் மஞ்சள் நிறமாகவோ இருக்க வேண்டும். அவ்வாறு இல்லாமல் அடர் மஞ்சள் நிறத்தில் இருந்தால் தண்ணீர் கூடுதலாக பருக வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். கடைசியாக எப்போது தாகமாக உணர்ந்தீர்கள் என்பதை கருத்தில் கொண்டு அதற்கேற்ப தண்ணீர் பருகுங்கள்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.