தலையாரிகளுக்கான ஓய்வூதிய வழக்குகள் உயர் நீதிமன்றம் புதிய உத்தரவு - துளிர்கல்வி

Latest

Our New Website

https://www.thulirkalvi.net/

Recent Posts Widget

Search This Site

தலையாரிகளுக்கான ஓய்வூதிய வழக்குகள் உயர் நீதிமன்றம் புதிய உத்தரவு

தலையாரிகளுக்கான ஓய்வூதிய வழக்குகள் உயர் நீதிமன்றம் புதிய உத்தரவு 

தமிழகத்தில் தலையாரி, வெட்டியான் போன்ற கிராம அடிப்படை ஊழியர்கள் 1.6.1995-ல் கிராம உதவியாளர்களாக மாற்றப்பட்டு காலமுறை ஊதியத்தில் பணி நிரந்தரம் செய்யப்பட்டனர். இவர்கள் ஓய்வுபெற்ற போது பணி நிரந்தரம் செய்த நாளிலிருந்து. ஓய்வு பெற்ற நாள் வரையிலான பணிக்காலத்தை கணக்கிட்டு ஓய்வூதியம் வழங்கப்பட்டது. இதையடுத்து பணியில் சேர்ந்த நாளிலிருந்து மொத்த பணிக் காலத்தையும் கணக்கிட்டு ஓய்வூதியம் வழங்கக் கோரி, நூற்றுக்கும் மேற்பட்ட தலையாரிகள் உயர் நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்தனர். 

 இந்த மனுக்களை விசாரித்த தனி நீதிபதிகள் தலையாரிகள் பணி நிரந்தரம் செய்யப்படுவதற்கு முந்தைய பணிக்காலத்தில் 50 சதவீதத்தை ஓய்வூதியக் கணக்கில் சேர்க்க உத்தரவிட்டனர். இதை எதிர்த்து அரசு சார்பில் செய்யப்பட்ட மேல்முறையீடு மனுக்கள் உயர் நீதிமன்றத்திலும், உச்ச நீதிமன்றத்திலும் தள்ளுபடி ஆயின. 

இந்நிலையில், இதே கோரிக்கைக்காக பல்வேறு மாவட்டங்களில் இருந்து அழகு, தங்கராஜ், நீலமேகம், வேலு, நடராஜன் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட தலையாரிகள் தங்களின் கோரிக்கையை நிராகரித்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகளை ரத்து செய்தும், முழுப்பணிக் காலத்தையும் ஓய்வூதியத்துக்கு கணக்கிட உத்தரவிடக்கோரியும் உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தனர். 

 இந்த மனுக்களை நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் விசாரித்தார். மனுதாரர்கள் சார்பில் வழக்கறிஞர் சு.விஸ்வலிங்கம் வாதிட்டார். இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவு: மனுதாரர்களின் கோரிக்கையை நிராகரித்து பிறப்பிக்கப்பட்ட அனைத்து இடைக்கால உத்தரவுகளும் ரத்து செய்யப்படுகின்றன. மனுதாரர்கள் பணியில் சேர்ந்த நாளிலிருந்து 31.5.1995 வரையிலான பணிக்காலத்தில் 50 சதவீதத்தையும், பணி நிரந்தரம் செய்யப்பட்டதில் இருந்து ஓய்வு வரையிலான பணிக்காலத்தையும் சேர்த்து ஓய்வூதியக் கணக்குக்கு எடுத்துக் கொள்ள வேண்டும்.  இதன் அடிப்படையில், திருத்தப்பட்ட ஓய்வூதிய பரிந்துரைகளை 8 வாரத்தில் வருவாய்த்துறை முதன்மைச் செயலர் தலைமைக் கணக்காயருக்கு அனுப்ப வேண்டும். அந்தப் பரிந்துரை அடிப்படை யில் 4 வாரத்தில் ஓய்வூதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார். 🔥👉இந்தச் செய்திப் பிடித்திருந்தால் தயவுசெய்து ஷேர் செய்யுங்கள்

No comments:

Post a Comment

Please Comment