உங்களுக்கு உயர் ரத்த அழுத்தம் இருக்கிறதா? - துளிர்கல்வி

Latest

Recent Posts Widget

Search This Site

Sunday, May 17, 2020

உங்களுக்கு உயர் ரத்த அழுத்தம் இருக்கிறதா?

உங்களுக்கு உயர் ரத்த அழுத்தம் இருக்கிறதா? ஆராய்ச்சியில் வெளியாகும் புதிய தகவல்கள் 

 உலக சுகாதார நிறுவனம், ‘கார்டியோவாஸ்குலர் என்ற இதய நோய் இறப்பு விகிதம் அதிகரிக்க முக்கிய காரணம் உயர் ரத்த அழுத்தம்’ என்பதை சுட்டிக்காட்டி உள்ளது. உலக அளவில் செயல்பட்டு வரும் 85 தேசிய உயர் ரத்த அழுத்த சங்கங்களின், தலைமை அமைப்பான ‘தி வேர்ல்டு ஹைபர்டென்ஷன் லீக்’ (டபிள்யூ.எச்.எல்), ‘உலகம் முழுவதிலும் உயர் ரத்த அழுத்த பாதிப்பு கொண்ட மக்களில் 50, சதவீதத்திற்கும் மேற்பட்டவர்கள் அவர்களது ஆரோக்கிய நிலை குறித்து அறியாமல் இருக்கிறார்கள்’ என்ற தகவலை தெரிவித்துள்ளது. 

இதன் காரணமாக மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக உலக உயர் ரத்த அழுத்த தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. வாழ்க்கையில் பணம் சம்பாதிப்பதோடு, ஆரோக்கியமான உடல் நலத்தையும், மகிழ்ச்சியான வாழ்க்கை முறையையும் மேற்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் உயர் ரத்த அழுத்தம் வரக்கூடும். 

இந்நோய் இதற்கு முன்பு, 40 வயதைக் கடந்தவர்களுக்கு மட்டுமே ஏற்பட்டு வந்தது. ஆனால், இன்று இளம் வயதினரும் கூட இந்நோயால் பாதிக்கப்படுவதாக ஆய்வுகள் சொல்கின்றன. ரத்த அழுத்தம் என்பது ‘உயர் ரத்த அழுத்தம்’, ‘குறைந்த ரத்த அழுத்தம்’ என இரண்டு வகையாக உள்ளது. 

பொதுவாக, 30 வயதுள்ள ஒரு நபருக்கு 120, 80 மி.மீ. பாதரச அளவு என்பது மிகவும் சரியான ரத்த அழுத்தம் ஆகும். இதில் 120 என்பது சிஸ்டாலிக் அழுத்தம். அதாவது, இதயம் சுருங்கி ரத்தத்தை உடலுக்குத் தள்ளும்போது ஏற்படுவது. இது ‘சுருங்கு அழுத்தம்’ ஆகும். 

80 என்பது டயஸ்டாலிக் அழுத்தம். அதாவது, இதயம் தன்னிடம் இருந்து ரத்தத்தை வெளியேற்றி, விரிந்த நிலையில் உடலில் இருந்து திரும்ப வரும் ரத்தத்தை பெறுவது. இது ‘விரிவு அழுத்தம்’ ஆகும். அதன் அடிப்படையில், கீழ்க்கண்ட மூன்று பிரிவுகளாக உயர் ரத்த அழுத்தம் வகைப்படுத்தப்பட்டுள்ளது. முதல் நிலை சிஸ்டாலிக் 140 - 159, டயஸ்டாலிக் 90 - 99. இரண்டாம் நிலை சிஸ்டாலிக் 160 - 179, டயஸ்டாலிக் 100 - 109. நெருக்கடி நிறைந்த மூன்றாம் நிலை சிஸ்டாலிக் 180 -க்கு மேல், டயஸ்டாலிக் 110-க்கு மேல். 35 முதல் 45 வயதினை ஒருவர் கடந்து செல்லும்போது, அவரது உடலில் உள்ள சிறிய சுத்த ரத்த குழாய்கள் விரியும் தன்மையை இழக்கின்றன. 

தவறான உணவுப்பழக்கம் காரணமாக ரத்தக் குழாய்களின் உட்புறம் படியும் தீங்கு செய்யும் கொழுப்பால், தடிப்பு ஏற்பட்டு அதன் உள் அளவு சுருங்கி விடுகிறது. அதனால், ரத்த ஓட்டத்தின் சீரான வேகம் குறைந்து, அழுத்தம் அதிகமாகும் நிலைதான் உயர் ரத்த அழுத்தம். இதை நோய் என்று சொல்ல இயலாது. ஆனால், உடலை பாதிக்கும் வெவ்வேறு நோய்களுக்கான அடிப்படை காரணமாக இது அமைந்து விடுகிறது. 

இது அறிகுறிகளை காட்டாமல் தாக்குவதால் ‘சைலண்ட் கில்லர்’ என்றும் சொல்லப்படுகிறது. உயர்ரத்த அழுத்தத்திற்கான காரணங்கள்: உணவுப் பழக்கம் மற்றும் மரபியல் காரணம். எளிதில் உணர்ச்சி வசப்படுவது, மன அழுத்தம் கொள்வது. புகைப்பிடிப்பது, மது அருந்துவது. அதிக உடல் எடை மற்றும் ஹார்மோன் சுரப்பி கோளாறுகள். நீரிழிவு, சிறுநீரக கோளாறுகள். உடற்பயிற்சி இல்லாதது. சத்தமான இடங்களில் நீண்ட நாள் வசிப்பது. கொழுப்புச்சத்து நிறைந்த உணவுகளை அதிகம் சாப்பிடுவது, கருத்தடைக்கான மருந்துகள் அதிகம் பயன்படுத்துவது போன்றவைகளால் உயர் ரத்த அழுத்தம் ஏற்படலாம். 

 உள் உறுப்புகளில் இதயமே ரத்த அழுத்தத்தின் பாதிப்பை நேரடியாக சந்தித்து, மாரடைப்பை உருவாக்குகிறது. உயர் ரத்த அழுத்தத்தை வெகுநாட்களாகக் கண்டு கொள்ளாமல் விடுவதால், அந்த அதிக ரத்த அழுத்தத்துக்கு எதிராக பம்ப் செய்யும் இதயம் விரிவடைந்து, அதன் செயல்திறன் குறையலாம். இறுதியாக, இருதய செயலிழப்பு என்ற நிலையும் ஏற்படலாம். 

 குறை ரத்த அழுத்தம் (ஹைபோடென்ஷன்) குறித்த விழிப்புணர்வும் நமக்கு தேவை. உலக அளவில் சொல்லப்படும் புள்ளி விவரப்படி இளம் வயதில் 100-ல் 10 நபர்களுக்கு குறை ரத்த அழுத்தம் உள்ளதாக அறியப்பட்டுள்ளது. 30 வயதுள்ள ஒருவருக்கு பாதரச அளவு 90,60 மி.மீ-க்கு கீழ் குறைந்தால் அது ‘குறை ரத்த அழுத்தம்’. இதில் பல வகை உண்டு. வழக்கமாக சொல்லப்படும் குறை ரத்த அழுத்த நோய்க்கு ‘தமனி நாள குறை ரத்த அழுத்தம்’ (ஆர்ட்டெரியல் ஹைபோடென்ஷன்) என்று பெயர். விபத்துக்கு ஆளானவர்கள், 

தடகள வீரர்கள், கடும் உடற்பயிற்சி செய்பவர்கள், உடல் எடை குறைந்தவர்கள், கர்ப்பிணிகள், தைராய்டு உள்ளிட்ட ஹார்மோன் பிரச்சினை கொண்டவர்கள், முதியோர்கள், படுக்கையில் நீண்ட காலமாக இருக்கும் நோயாளிகள், கடுமையான நோய்த்தொற்று, நுரையீரல் நோய், சர்க்கரை நோய், உடலில் நீரிழப்பு, ஒவ்வாமை உள்ளவர்கள் போன்றோருக்கு குறை ரத்த அழுத்தம் ஏற்படக்கூடிய சாத்தியக்கூறு உள்ளது. 

 தைராய்டு, அட்ரீனல், பிட்யூட்டரி ஹார்மோன்களுக்கும், ரத்த அழுத்த அளவுகளின் மாற்றங்களுக்கும் தொடர்பு உள்ளது. பெண்களுக்கு ஈஸ்ட்ரோஜன், புரொஜெஸ்ட்ரான் ஹார்மோன்கள் சேர்ந்து ரத்த அழுத்தத்தை தீர்மானிக்கின்றன. உடலில் ரத்த அழுத்தம் சீரில்லாமல் இருந்தால், குறைவாகச் சுரக்கும் ஹார்மோனை சமநிலைப்படுத்த, இன்னொரு ஹார்மோன் அதிகமாகச் சுரக்கும். 

இது உடல் தன்னைத்தானே சரி செய்து கொள்ளும் இயற்கையான நிலையாகும் என்று மருத்துவ ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. உயர் ரத்த அழுத்த பிரச்சினை கொண்டவர்கள் தினமும் 30 நிமிடங்கள் வாக்கிங் போவதோ, 20 நிமிடங்கள் சைக்கிள் ஓட்டுவதோ அல்லது நீச்சல் பயிற்சியோ பெறவேண்டும். இவை உடற்பருமனையும் குறைத்து ரத்த அழுத்தத்தையும் சீராக்கும். சத்துள்ள உணவுகளையும் உண்ணவேண்டும். அவ்வப்போது ரத்த அழுத்த பரிசோதனை செய்து, தேவைப்பட்டால் மருத்துவ ஆலோசனைகளை பெறவேண்டும்.

No comments:

Post a Comment

Please Comment