‘விடுமுறை முடிந்து பள்ளி திரும்பியது போன்ற உணர்வு’ அரசு ஊழியர்களின் சுவாரசியமான கருத்து - துளிர்கல்வி

Latest

Search This Site

‘விடுமுறை முடிந்து பள்ளி திரும்பியது போன்ற உணர்வு’ அரசு ஊழியர்களின் சுவாரசியமான கருத்து

‘விடுமுறை முடிந்து பள்ளி திரும்பியது போன்ற உணர்வு’ அரசு ஊழியர்களின் சுவாரசியமான கருத்து 


 ஏறக்குறைய 50 நாட்களுக்கு பிறகு அரசு அலுவலகங்கள் நேற்று முதல் வழக்கம் போலவே செயல்பட தொடங்கின. அரசின் உத்தரவை ஏற்று 50 சதவீத பணியாளர்கள் வருகை தந்திருந்தனர். நீண்ட நாட்களுக்கு பிறகு அலுவலகம் வந்த அவர்கள் மகிழ்ச்சியுடன் காணப்பட்டனர். 

  இதுகுறித்து ஊழியர்கள் சிலரின் கருத்துகள் வருமாறு:- 

  பொது போக்குவரத்து வேண்டாமே... 

தலைமைச் செயலக நிதித்துறை பிரிவு அலுவலர் எஸ்.ஆறுமுகம் (அம்பத்தூர்):- 

 ஊரடங்கு அறிவிக்கும்போது திருவள்ளூரில் மாவட்ட பயிற்சி முடிந்து, தலைமைச் செயலகத்துக்கு வரவேண்டியது இருந்தது. இப்போது இத்தனை நாட்களுக்கு பிறகு பணிக்கு வந்திருக்கிறேன். மகிழ்ச்சியாகவே உணருகிறேன். வீட்டிலேயே இருந்து விரக்தியடைந்த ஊழியர்கள் இப்போது நிம்மதியாக உணருவார்கள். தலைமைச் செயலகத்தில் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. நான் அம்பத்தூரில் இருந்து மோட்டார் சைக்கிளில் அலுவலகம் வந்தேன். அதேபோல மோட்டார் சைக்கிள் உள்ளவர்கள் முடிந்தவரை தங்கள் வாகனங்களிலேயே வரவேண்டும் என்பேன். முடிந்தளவு பொது போக்குவரத்தை தவிர்த்தால் நல்லது தானே...

  சுறுசுறுப்பு 

  தலைமைச் செயலக பொதுத்துறை உதவி பிரிவுஅலுவலர் கே.பொற்கொடி(வடபழனி):- 

 தலைமைச் செயலகத்துக்கு நீண்ட நாட்களுக்கு பிறகு திரும்பியது மகிழ்ச்சி அளிக்கிறது. ஊரடங்கு காரணமாக இதுவரை தொலைபேசியில் மட்டுமே பேசிக்கொண்டிருந்த என் சக ஊழியர்கள், நண்பர்களை நேரில் காணும் வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது. ஆனாலும் இப்போதுள்ள சூழ்நிலையில் சமூக இடைவெளியை நிச்சயம் கடைப்பிடித்தாக வேண்டும். இத்தனை நாட்களாக பணியாற்றாமல் வீட்டிலேயே சும்மா இருந்து வந்தோம். இப்போது எங்களது வழக்கமான சுறுசுறுப்பு திரும்பியுள்ளது. மீண்டும் பணிக்கு வந்தது மட்டற்ற மகிழ்ச்சி அளிக்கிறது. அதேவேளை ஊழியர்கள் அனைவரும் சமூக இடைவெளியை கடைப்பிடித்தால் சிறப்பாக இருக்கும். 

  நிம்மதி 

  எழிலகம் வருவாய்த்துறை ஊழியர் மைக்கேல் (வியாசர்பாடி):- 

 ஊரடங்கு காரணமாக வீட்டிலேயே இருந்து வந்தாலும், ‘எப்படா... வேலைக்கு போவோம்...’ என்பதே எனது மனநிலையாக இருந்தது. வேலை செய்யாமல் வீட்டிலேயே உட்கார்ந்து கொண்டு டி.வி. நிகழ்ச்சிகள் பார்ப்பது எனக்கு பிடிக்கவே இல்லை. இப்போது அலுவலகத்தில் காலடி எடுத்து வைத்தபின்பே எனக்கு நிம்மதி கிடைத்திருக்கிறது. கொரோனா பாதிப்பு இருப்பது உண்மை. ஆனால் முறையான பாதுகாப்பு வழிமுறைகளை கடைப்பிடித்தால் இந்த தொற்றை விரட்டியடிக்கலாம். எது எப்படியோ... என் மனதுக்கு நிம்மதி கிடைத்து உள்ளது. முன்பை காட்டிலும் மகிழ்ச்சியாக, கடினமாகவும் உழைப்பேன். 

  பணிக்கு திரும்பியது மகிழ்ச்சி 

எழிலகம் நில சீர்திருத்தத்துறை ஊழியர் கஸ்தூரி (கோடம்பாக்கம்):-

பள்ளி-கல்லூரி காலங்களில் கோடை விடுமுறை அளிக்கப்படுவது போல கொரோனாவால் எங்களுக்கும் கோடை விடுமுறை கிடைத்தது. விடுமுறை நாட்கள் மகிழ்ச்சியாகவே அமைந்தது. குடும்பத்தினருடன் அதிக நேரம் செலவிட முடிந்தது. உற்சாகமாக பொழுதும் கழிந்தது. இப்போது மீண்டும் அலுவலகம் வந்திருக்கிறேன். விடுமுறை முடிந்து பள்ளி திரும்பியது போன்ற உணர்வே என்னில் மேலோங்கி காணப்படுகிறது. விடுமுறை நாட்கள் முடிந்தாலும், மீண்டும் பணிக்கு திரும்பியது மகிழ்ச்சியை அளித்திருக்கிறது.

  பாதுகாப்பு வழிமுறைகளை..

  எழிலகம் திட்ட கமிஷன்துறை ஊழியர் கார்த்திகேயன் (ஊரப்பாக்கம்):-


விடுமுறை முடிந்து பணிக்கு வந்தாலும் கொரோனா பீதி குறையவில்லை. அதனால்தான் முக கவசம், கையுறை சகிதமாக அலுவலகம் வந்துள்ளேன். அலுவலகம் செல்லும்போது வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் ஒருவித கலக்கம் அடைந்தார்கள். நான் தைரியம் சொல்லிவந்தேன். இங்கு தேவையான பாதுகாப்பு நடைமுறைகள் இருப்பதாகவே உணருகிறேன். சமூக இடைவெளி உள்ளிட்ட பாதுகாப்பு வழிமுறைகளை கடுமையாக கடைப்பிடிப்பேன். என் சக ஊழியர்களையும் கடைப்பிடிக்க வைப்பேன். பாதுகாப்பு கருதி எனது இருசக்கர வாகனத்திலேயே அலுவலகம் வந்துள்ளேன்.

No comments:

Post a Comment

Please Comment