ஆழ்துளைக் கிணற்றில் மழை நீர் சேகரிப்பது எப்படி? - துளிர்கல்வி

Latest

Our New Website

https://www.thulirkalvi.net/

Recent Posts Widget

Search This Site

ஆழ்துளைக் கிணற்றில் மழை நீர் சேகரிப்பது எப்படி?

ஆழ்துளைக் கிணற்றில் மழை நீர் சேகரிப்பது எப்படி? 

பொதுவெளியிலும் வீதிகளிலும் குடிநீர்த் தேவைக்காகத் தோண்டப்பட்டு பயன் இல்லாமல் இருக்கும் ஆழ்துளைக் கிணறுகளைத் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், உள்ளாட்சி துறையினர் சேர்ந்து அதை மழை நீர் கட்டமைப்பாக மாற்றிவிடுவார்கள். ஆனால், வீடுகள், தோட்டங்கள், வயல்வெளிகளில் அமைத்துத் தண்ணீர் கிடைக்காமல் போனதால் பயனற்றுக் கிடக்கும் ஆழ்துளைக் கிணறுகளை மழை நீர் சேகரிப்புக் கட்டமைப்பாக மாற்றுவது அந்தந்த வீட்டு, நில உரிமையாளரின் பொறுப்புதான். 


 அண்மைக் காலமாக வீடுகளில் ஒன்றுக்கு இரண்டு, மூன்று ஆழ்துளைக் கிணறுகள் அமைக்கும் போக்கும் அதிகரித்துள்ளது. ஓரிடத்தில் அமைக்கப்பட்ட ஆழ்துளைக் கிணற்றில் இருந்து தண்ணீர் கிடைக்காதபட்சத்தில் வேறொரு இடத்தில் புதிய ஆழ்துளைக் கிணறு அமைக்கும் பழக்கமும் மக்களிடம் உள்ளது. இப்படியாகப் பல வீடுகளில் இரண்டு ஆழ்துளைக் கிணறுகள் இருக்கவும் செய்யலாம். அதில் ஒன்று, பயனற்றதாகக் கிடக்கவும் வாய்ப்பு உண்டு. 


அதன் மீது சிமெண்ட் சிலாப் போட்டு வெறுமனே மூடி வைத்திருக்கவும் செய்யலாம். இதுபோன்று பயனற்றுக் கிடைக்கும் ஆழ்துளைக் கிணற்றைச் சுற்றி மழை நீர்ச் சேகரிப்புக் கட்டமைப்பை ஏற்படுத்தி அந்தக் கிணற்றை உயிர்ப்பிக்கலாம் (ரீசார்ஜ் செய்யலாம்). எளிய வழியில் ஆழ்துளைக் கிணற்றைச் சுற்றி மழைநீர்ச் சேகரிப்பு கட்டமைப்பை எப்படி அமைப்பது என்பதை தெரிந்துகொண்டால், நீங்களே அதைச் செய்துவிட முடியும். எப்படி அமைப்பது?  குழாய் பதிக்கப்பட்ட நிலையில் இருக்கும் ஆழ்துளை கிணற்றைச் சுற்றி முதலில் ஒன்றரை அடி ஆரத்தில் (ரேடியஸ்) பள்ளம் தோண்ட வேண்டும்.  பிறகு வெட்டப்பட்ட ஆரத்தில் 6 அடி ஆழத்துக்குப் பள்ளம் தோண்டிக்கொள்ள வேண்டும். இந்தப் பள்ளத்தில் இரண்டரை அடி விட்டத்தில் இருக்கும் உறையை இறக்க வேண்டும் என்பதால், இந்த அளவில் பள்ளம் வெட்டிக்கொள்ள வேண்டும்.  வீட்டைச் சுற்றி சேகரமாகும் மழை நீரை இந்தப் பள்ளத்தில் விட வேண்டும். 


எனவே, மழை நீரைக் குழாய்கள் வழியாக இணைத்துப் பள்ளத்தில் விழும்படி ஏற்பாடு செய்ய வேண்டும்.  பள்ளத்தைச் சுற்றி இரண்டரை அடி விட்டத்தில் (டயாமீட்டர்) சிமெண்ட் உறையை இறக்கிக்கொள்ள வேண்டும். இதற்கு 5 உறைகள் தேவைப்படும்.  அந்த உறையின் வழியாகக் குழாய் செல்லும் வண்ணம், உறையில் துளையைப் போட்டு குழாயை நுழைத்துவிடுங்கள்.  உறையைச் சுற்றி இடைவெளிகள் தெரியும். அந்த இடைவெளிகளை சிமெண்ட் கொண்டு பூசிவிட வேண்டும். இல்லையென்றால், சேகரிக்கப்படும் தண்ணீர் கசிந்துவிடும்.  


இப்போது ஆழ்துளைக் கிணற்றுக்குள் இறங்கியிருக்கும் குழாயைச் சுற்றி அடிப்பகுதியிலிருந்து மேலே ஒன்றரை அடிக்கு சல்லடைப் போல துளையைப் போட்டுக்கொள்ளுங்கள். (இதைப் பணிகள் தொடங்குவதற்கு முன்பு தொடக்கத்திலேயே செய்துகொள்வது நல்லது.)  உறையில் சேரும் தண்ணீர் இந்தத் துளையின் வழியாகத்தான் ஆழ்துளை கிணற்றுக்குள் இறங்கும் என்பதால் இதைச் செய்துகொள்ள வேண்டும்.  மழை பெய்து தண்ணீர் குழாய்க்கு வரும்போது அழுக்காக வரலாம். 


அதில் தூசி, மண், மணல் போன்றவையும் கலந்திருக்கலாம். இந்தக் கலவையுடன் தண்ணீர் ஆழ்துளைக் கிணற்றுக்குள் சென்றால், கிணறு தூர்ந்துகொண்டே வரும். எனவே அந்தக் குழாயைச் சுற்றி ஒரு அடி தடிமனில் உள்ள ஸ்பான்சைச் சுற்றிவிட்டு கயிற்றால் இறுக்கிக் கட்டிக்கொள்ள வேண்டும்.  பிறகு சணல் சாக்கைக் கொண்டு ஸ்பான்ச் மீது சுற்றி கயிற்றால் கட்டிவிடுங்கள். இதுவும் அழுக்கான தண்ணீரை வடிகட்டத்தான். தூசி, மண், கல் இறங்காமல் இது தடுக்கும்.  இந்தப் பணிகள் முடிந்த பிறகு உறையில் ஒன்றரை அடிக்குச் சரளைக் கற்களைக் கொண்டு நிரப்ப வேண்டும்.  அதன்மீது ஒன்றரை அடிக்கு உடைத்த செங்கற்களைச் சுற்றிலும் நிரப்ப வேண்டும். 


 இதையடுத்து அரை அடிக்கு வீடு கட்டப் பயன்படுத்தப்படும் ஜல்லிக் கற்களைக் கொட்டி நிரப்ப வேண்டும்.  பிறகு அதன் மீது அடுப்புக் கரியை அரை அடிக்குக் கொட்டி நிரப்பி விடுங்கள்.  அதன் பிறகு அரை அடிக்கு மணலை சலித்த பிறகுக் கிடைக்கும் ‘கப்பி’ மண் என்றழைக்கப்படும் பொடிக்கற்களுடன் கூடிய மண்ணை கொட்டி நிரப்ப வேண்டும்.  இதோடு பணி முடிந்துவிடவில்லை. பிறகு ஆற்று மணலை அரை அடிக்குக் கொட்டி நிரப்ப வேண்டும்.  கடைசியாகக் கூழாங்கற்களை ஓர் அடிக்குக் கொட்டி நிரப்ப வேண்டும். 


 இப்போது உங்களுடைய வீட்டில் இருந்த பயனற்ற ஆழ்துளைக் கிணறு மழை நீர்ச் சேகரிப்புக் கட்டமைப்பாக மாறிவிட்டது. இதில் தொடர்ந்து மழைநீரைச் சேமிக்கும்பட்சத்தில் பயனற்ற ஆழ்துளைக் கிணறு ரீசார்ஜ் ஆகிவிடும். மீண்டும் அந்தக் கிணற்றிலிருந்து உங்களுக்குத் தண்ணீர் கிடைக்கும். இந்த மழை நீர் கட்டமைப்பை பயனற்ற ஆழ்துளைக் கிணறுகளுக்கு மட்டுமே செய்ய வேண்டும் என்றில்லை. பயனில் உள்ள ஆழ்துளைக் கிணறுகளுக்கும் செய்யலாம். 


அதன்மூலம் ஆழ்துளைக் கிணற்றில் தண்ணீர் சேகரமாகி, அந்த இடத்தில் நிலத்தடி நீர் மட்டம் உயரும். எப்போதும் தண்ணீர் கிடைக்கும். மழை நீர் சேகரிப்பு முறைகளில் பல வகைகள் உள்ளன. இதில் ஆழ்துளைக் கிணற்றில் மழை நீரை சேமிப்பதும் ஒரு வகை. தற்போது பயனற்ற ஆழ்துளைக் கிணறுகளை மழைநீர்ச் சேகரிப்பு கட்டமைப்பாக மாற்ற வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ள நிலையில், இந்த வழியில் நீங்கள் முயன்று பார்க்கலாம்.

No comments:

Post a Comment

Please Comment