தனித்திறன்களை வளர்க்கும் பின்லாந்து கல்வி முறை: தமிழகத்தில் நடைமுறைப்படுத்த பரிசீலனை - துளிர்கல்வி

Latest

கற்போம்.. கற்பிப்போம்..

♨Dear New Admins Please add this 👉 number 9344118029 to your WhatsApp groups🔥

LIKE US

Popular Posts

Tuesday, September 3, 2019

தனித்திறன்களை வளர்க்கும் பின்லாந்து கல்வி முறை: தமிழகத்தில் நடைமுறைப்படுத்த பரிசீலனை

தனித்திறன்களை வளர்க்கும் பின்லாந்து கல்வி முறை: 
தமிழகத்தில் நடைமுறைப்படுத்த பரிசீலனை பின்லாந்து பள்ளிகளில் மாணவர்களின் தனித்திறன்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் கற்பித்தல் முறை, தமிழக கல்விக் குழுவை பெரிதும் கவர்ந்துள்ளதாகவும், அந்த நடைமுறையை தமிழ்நாட்டில் அறிமுகப்படுத்த பரிசீலனை செய்யவுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் மற்றும் செயலர் பிரதீப் யாதவ் தலைமையிலான கல்விக்குழு பின்லாந்து, சுவீடன் நாடுகளுக்கு 7 நாள் சுற்றுப் பயணம் மேற்கொள்ள ஆகஸ்ட் 28-ஆம் தேதி சென்னையிலிருந்து புறப்பட்டுச் சென்றது. கல்வி முறை-கற்றல் உபகரணங்கள் என்ன?: முதல் கட்டமாக பின்லாந்து நாட்டின் ஜோன்சு ஹெய்னாபுரோடு நகரத்தில் உள்ள லிலுன்லாட்டி மழலையர் பள்ளியை பார்வையிட்டு ஆய்வு செய்த அமைச்சர் செங்கோட்டையன் அந்தப் பள்ளியில் பின்பற்றப்படும் கல்விமுறை, கற்றல் உபகரணங்கள், மாணவர்களின் கற்றல் திறன் உள்ளிட்ட அம்சங்கள் குறித்து ஆய்வு செய்தார். அதன் பின்னர் பள்ளி முதல்வர் டீனா திலி கெய்னேன் கோசேனென் உடன் அமைச்சர் செங்கோட்டையன் கலந்துரையாடினார். 


அதைத் தொடர்ந்து மேலும் சில பள்ளிகளிலும் தமிழக கல்விக்குழு ஆய்வு மேற்கொண்டது. பின்னர் பின்லாந்தின் வடக்கு கரோலியா பகுதியில் உள்ள புகழ்பெற்ற ரிவேரா கல்வி நிறுவனத்துக்கு அதிகாரிகளுடன் சென்ற அமைச்சர், அந்த நிறுவனத்தில் அளிக்கப்படும் தொழில் சார்ந்த பயிற்சிகள் குறித்து பயிற்சியாளர்கள் மற்றும் மாணவர்களிடம் நேரடியாகக் கேட்டறிந்தார். ஆசிரியர் பயிற்சி கல்லூரியில் ஆய்வு: இதைத் தொடர்ந்து அந்த நாட்டின் துர்க் பகுதியில் அமைந்துள்ள ஆசிரியர் பயிற்சி கல்லூரியை திங்கள்கிழமை பார்வையிட்ட அமைச்சர், அங்கு ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் கற்றல் மேம்பாட்டு பயிற்சி குறித்து ஆலோசனை மேற்கொண்டார். 


அப்போது தமிழக பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் பிரதீப் யாதவ் மற்றும் கல்வி அதிகாரிகள் உடனிருந்தனர். தொடர்ந்து பின்லாந்து நாட்டின் கல்வி அமைச்சரையும் சந்தித்து, அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை நடத்தினார். அரசுப் பள்ளிகளே அதிகம்: இது குறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், உலகிலேயே கல்வி முறையில் பின்லாந்து சிறந்து விளங்குகிறது. 7 வயது முதல் 16 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு கட்டாயக்கல்வி, இலவச உயர்நிலைக்கல்வி, கல்வி முறையை மாணவர்களே தேர்வு செய்யும் வசதி, ஆகியவை பின்லாந்து நாட்டு கல்வித்துறையின் சிறப்பம்சங்களாகும். அந்த நாட்டில் 6 வயதில் பள்ளி செல்லும் நிலையில் 6 வயது குழந்தைகளுக்கு பள்ளிக்கு முந்தைய கல்வி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. 7 வயது அனைத்துக் குழந்தைகளும் கட்டாயம் கல்வி கற்கும் சட்டம் அமலில் உள்ள நிலையில், 7 வயது முதல் 16 வயது வரையில் பின்லாந்து நாட்டில் உள்ள அனைத்துக் குழந்தைகளும் 9 ஆண்டு பள்ளிக் கல்வியை கட்டாயம் படிக்க வேண்டும். 


 பின்லாந்தில் பள்ளிக் கல்வியை முடித்தவர்களில் 96 சதவீதம் பேர் உயர்நிலைக் கல்வி படிக்கிறார்கள். இதனால் அந்நாட்டு பள்ளிக் கல்விமுறையை அறிந்து வருவதற்காக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தலைமையிலான குழுவினர் அங்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளனர் என்றனர். பின்லாந்து பள்ளிகளில் மாணவர்களின் தனித் திறன்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் கற்பித்தல் முறை, தமிழக கல்விக்குழுவை பெரிதும் கவர்ந்துள்ளதாகவும், அந்த நடைமுறையை தமிழ்நாட்டில் அறிமுகப்படுத்த பரிசீலனை செய்யவுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

உங்களின் மேலான கருத்துக்களை இங்கே பதிவிடவும். .

இந்த வலைப்பதிவில் தேடு:

LIKE OUR FACEBOOK PAGE

நட்பில் இணைந்திருங்கள்