ஆசிரியர் தாக்கப்படும் சம்பவம் இனி நடக்கக் கூடாது: பள்ளிக்கல்வி இணை இயக்குநர் - துளிர்கல்வி

Latest

Our New Website

https://www.thulirkalvi.net/

Recent Posts Widget

Search This Site

ஆசிரியர் தாக்கப்படும் சம்பவம் இனி நடக்கக் கூடாது: பள்ளிக்கல்வி இணை இயக்குநர்

ஆசிரியர் தாக்கப்படும் சம்பவம் இனி நடக்கக் கூடாது: பள்ளிக்கல்வி இணை இயக்குநர் 

 நாமக்கல் மாவட்டத்தில் ஆசிரியர் தாக்கப்பட்ட சம்பவம்போல் இனி நடக்கக் கூடாது என்றார் பள்ளிக் கல்வித்துறையின் இணை இயக்குநர் வை.குமார். நாமக்கல் மாவட்ட அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் 124 தலைமை ஆசிரியர்களுக்கான தலைமைப் பண்பு குறித்த பயிற்சி முகாம் நாமக்கல்லில் உள்ள மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில், வை.குமார் பேசியது:- நாமக்கல் மாவட்டத்தில் ஆசிரியர் ஒருவரை அண்மையில் பள்ளிக்குள் புகுந்து சிலர் தாக்கினர். இதுபோன்ற சம்பவம் நாமக்கல்லில் மட்டுமல்ல, உலகில் எங்கும் நடக்கக் கூடாது. ஆசிரியர் தாக்கப்பட்டதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம். ஆனால் பள்ளிக்குள் புகுந்து தாக்கும் நிகழ்வைப் பார்க்கும்போது மனம் பதறுகிறது. இது அவர் மீது பட்ட தாக்குதல் அல்ல; அனைத்து ஆசிரியர்கள் மீதும் நடத்தப்பட்ட தாக்குதலாகத் தான் நினைக்க வேண்டும். வேறு எந்த துறையில் தவறு நிகழ்ந்திருந்தாலும் மக்கள் ஓரிரு நாள் நினைவில் வைத்திருப்பர். அதன்பின் மறந்து விடுவர். ஆனால், ஆசிரியர்களுக்கு ஏற்பட்ட இழுக்கு என்பது எளிதில் மறையாது. பெற்றோருக்கு அடுத்தபடியாக ஆசிரியர்கள்: 


ஒரு குழந்தையை உறவினர் வீடுகளில் பெற்றோர் விட்டால், மணிக்கு ஒருமுறை அந்தக் குழந்தையைப் பற்றி விசாரிப்பர். ஆனால், பள்ளிக்கு காலை அனுப்பினால் மாலை வீடு திரும்பும் வரை, சுமார் 8 மணி நேரம் அந்தக் குழந்தையைப் பற்றிக் கேட்பதில்லை. 


பெற்றோருக்கு அடுத்தபடியாக ஆசிரியர்களைப் பார்க்கின்றனர். தலைமை ஆசிரியர்கள் பள்ளிக்கு வரும் குழந்தைகளிடத்தில் கனிவாக நடந்து கொண்டு, அவர்களின் எண்ண ஓட்டத்தை மாற்ற வேண்டும். மாணவர்களை மட்டும் கவனித்தால் போதாது. ஆசிரியர்களிடத்திலும் கவனம் இருக்க வேண்டும். ஆசிரியர் பணி சேவையே: 


மற்ற துறைகளில் வேண்டுமானால், பணி என்பது கடமையாக இருக்கும். ஆனால், ஆசிரியர் பணி என்பது சேவைக்கானது. ஆசிரியரையும், சமூகத்தையும் இணைத்துப் பார்த்தக் காலம் தற்போது இல்லை. அப்போது, குழந்தைகளை பள்ளியில் விடும்போது எப்படி வேண்டுமானாலும் கண்டியுங்கள் என்று கூறினர். அதுபோன்று சொல்வதற்கான பெற்றோர் தற்போது இல்லை. ஆசிரியர் மீதான நம்பிக்கை குறைந்து விட்டதோ என்று எண்ணத் தோன்றுகிறது. குறிப்பிட்ட நேரத்துக்கு முன்பாக தலைமை ஆசிரியர்கள் பள்ளிக்கு வந்து, மாணவர்களையும், ஆசிரியர்களையும், வகுப்பறைகளையும் கவனித்து பணியாற்ற வேண்டும். மாணவர்கள் நல்ல பண்புடன் வளர்வதற்கான நடவடிக்கைகளை பின்பற்றுங்கள் என்றார்.  முகாமில் முதன்மைக் கல்வி அலுவலர் ப.உஷா பேசியது:- பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழக அளவில் மூன்றாமிடத்திலும், பிளஸ் 2 பொதுத் தேர்வில் 5-ஆம் இடத்திலும் நாமக்கல் உள்ளது. நிகழாண்டு பொதுத் தேர்வில் அதே இடத்தை தக்க வைக்காமல் முதன்மையான இடத்துக்கு தேர்ச்சி விகிதம் அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளை தலைமை ஆசிரியர்கள் மேற்கொள்ள வேண்டும் என்றார். முகாமில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அர.அருளரசு பேசியது: ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு நேரத்தில் தவறு இழைக்கலாம். இருப்பினும், தனி மனித ஒழுக்கம் என்பது எல்லைமீறக் கூடாது. 


தனி மனித ஒழுக்கத்தை மாணவர்களுக்கு மட்டும் சொல்லிக் கொடுத்தால்போதாது, ஆசிரியர்களும் அதனைப் பின்பற்ற வேண்டும். மாணவ, மாணவியரிடத்தில், வீட்டிலும், வெளியேயும் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதையும் எடுத்துரைக்க வேண்டும். தலைக் கவசம் அணியுமாறு போலீஸ் தரப்பில் அறிவுறுத்துகிறோம். சிலர் மட்டுமே அதனைப் பின்பற்றுகின்றனர். பலர் போலீஸாரை ஏமாற்றுவது போல் தங்களை ஏமாற்றிக் கொண்டிருக்கின்றனர். மாணவ, மாணவியரிடம் நல்லொழுக்கத்தை போதிக்கும் வகையில் ஆசிரியர்கள் செயல்பட வேண்டும் என்றார். முகாமில் மாவட்டக் கல்வி அலுவலர்கள் (நாமக்கல்) மு.ஆ.உதயகுமார், ரமேஷ் (திருச்செங்கோடு) உள்ளிட்டோர் பேசினர்.

No comments:

Post a Comment

Please Comment