இஸ்ரோவின் விண்வெளி கண்காட்சி! - துளிர்கல்வி

Latest

துளிர்கல்வி வலைதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது,,, நட்பில் இணைந்திருங்கள்,, நன்றி!
Recent Posts Widget

Search This Site

Wednesday, September 18, 2019

இஸ்ரோவின் விண்வெளி கண்காட்சி!

இஸ்ரோவின் விண்வெளி கண்காட்சி! 


ஐக்கிய நாடுகள் சபை தீர்மானத்தின்படி, ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் 4 முதல் 10 வரை உலக விண்வெளி வாரம் (World Space Week - WSW) கொண்டாடப்படுகிறது. அதேபோன்று இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) அதன் நிறுவனர் டாக்டர் விக்ரம் சாராபாயின் நூற்றாண்டு விழாவை ( 1919-2019) தற்போது கொண்டாடி வருகிறது. ஆகஸ்ட் 12 முதல் தொடர்ந்து ஒரு வருடம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்தக் கொண்டாட்டத்தில், இஸ்ரோவின் விண்வெளி கண்காட்சிகள், பள்ளி மாணவர்களுக்கான போட்டிகள், பத்திரிகையாளருக்கான விருதுகள், சாதனை விஞ்ஞானிகளின் உரைகள் இடம் பெறுகின்றன. சாராபாய் பிறந்த ஆமதாபாத்தில் ஆகஸ்ட் 12 -இல் விண்வெளி கண்காட்சியுடன் தொடங்கிய நூற்றாண்டு விழா, நாடு முழுவதும் 100 இடங்களில் நடைபெற்று, 2020, ஆகஸ்ட் 12 ஆம் தேதி திருவனந்தபுரத்தில் நிறைவடைகிறது. திருநெல்வேலியில் கடந்த செப்டம்பர் 5 முதல் 8 -ஆம் தேதி வரை 4 நாள்கள் நூற்றாண்டு விழா விண்வெளி கண்காட்சி நடைபெற்றது. 


திருநெல்வேலி மாவட்டம், மகேந்திரகிரியில் உள்ள இஸ்ரோ உந்தும வளாகம் (ISRO PROPULSION COMPLEX - IPRC), திருநெல்வேலி சேவியர் பொறியியல் கல்லூரியுடன் இணைந்து இந்தக் கண்காட்சியை நடத்தியது. "மினி இஸ்ரோ' என அழைக்கப்படும் இந்த கண்காட்சியில், இஸ்ரோவின் முன்னேற்றங்கள் மற்றும் சாதனைகள் இடம்பெற்றன. சிறுவர்கள் முதல் கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் என அனைவரிடமும் அறிவியல் ஆர்வத்தை உருவாக்குவதையும், விண்வெளித் துறையில் ஒரு தொழிலை உருவாக்க அவர்களை ஊக்குவிப்பதையும் நோக்கமாகக் கொண்டது இந்த கண்காட்சி. 


கண்காட்சியைப் பார்வையிடும் ஒருவர், செயற்கைக்கோள்கள், செலுத்து வாகனங்கள் மற்றும் செயற்கைக்கோள்களின் பயன்பாடுகள் குறித்த முழு அளவிலான இஸ்ரோவின் நடவடிக்கைகளையும், விண்வெளித் திட்டத்தால் நம் நாடு எவ்வாறு பயனடைகிறது என்பதையும் தெளிவாக அறிந்துகொள்ள முடியும். சுருக்கமாக, இஸ்ரோவை உருவாக்கியவர் யார், அது ஏன் உருவானது, அது என்ன செய்கிறது, அது எவ்வாறு செய்கிறது மற்றும் நம் அன்றாட வாழ்க்கையில் இஸ்ரோ நம்மை எவ்வளவு மகிழ்விக்கிறது, நம் வாழ்க்கையை எவ்வாறு பாதுகாப்பாக வைத்திருக்கிறது என்ற அனைத்தும் இந்த கண்காட்சியைப் பார்வையிடுவோருக்கு தெளிவாகும். இந்த கண்காட்சியின் தொடக்க நிகழ்ச்சியில் மாணவர்களிடையே பேசிய இஸ்ரோ மகேந்திரகிரி வளாக இயக்குநர் ப. மூக்கையா, ""கேரள மாநிலம் தும்பாவில் இந்தியாவின் முதல் ராக்கெட் ஏவுதளத்தை அமைத்த போது, மீனவர்கள் அச்சம் தெரிவித்தனர். 


ஆனால், இப்போது நாம் செயற்கைக்கோள்கள் மூலம் கடலில் மீன்வளம், புயல் எச்சரிக்கை போன்றவற்றை அறிந்துகொள்ள முடிகிறது'' என விஞ்ஞானத்தின் முக்கியத்துவம் குறித்து விளக்கினார். பொதுவாக, GSLV, PSLV என 2 வகையான ராக்கெட் உள்ளது. இதில், ஜிஎஸ்எல்வி- புவிசார் ஒத்திசைவு சுற்றுப்பாதை செயற்கைக்கோள் செலுத்து வாகனம் என்றும், பிஎஸ்எல்வி- துருவ செயற்கைக்கோள் செலுத்து வாகனம் என்றும் அழைக்கப்படுகிறது. 


இந்த செயற்கைக்கோள்கள் எந்த திசையில் பூமியைச் சுற்றுகின்றன என்பதில் பலருக்கும் சந்தேகம் இருக்கும். இதில், ஜிஎஸ்எல்வி செயற்கைக்கோள் பம்பரத்தில் நூல் சுற்றுவதுபோல பூமியைச் சுற்றுகிறது என்றால், பிஎஸ்எல்வி செயற்கைக்கோள் பூமியை மேலிருந்து கீழாகச் சுற்றுகிறது. இதன்மூலம் பூமியின் அனைத்துப் பகுதிகளையும் இந்த செயற்கைக்கோள் ஆராய முடியும் என பெரிய ஒளிப் பலகைகள் மூலம் கண்காட்சியில் விளக்கியபோது மாணவர்கள் முகத்தில் ஒளிபிறந்தது. இதேபோல, நாம் இடதுகையைப் பயன்படுத்தும்போதுதான் மூளையின் வலதுபாகம் தூண்டப்படும். மூளையின் வலதுபாகம்தான் நம் படைப்பாற்றலுக்கானது. எனவே, புதியவற்றைப் படைக்க வலதுகை பயன்பாட்டுக்கு இணையாக, இடதுகையையும் பயன்படுத்த வேண்டும் என மாணவர்களுக்கு விளக்கப்பட்டது. கண்காட்சியையொட்டி, சேவியர் பொறியியல் கல்லூரியின் தேர்ந்தெடுக்கப்பட்ட 150 மாணவர்கள், 100 ஆசிரியர்களுக்கு இஸ்ரோ மகேந்திரகிரி விஞ்ஞானிகளால் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இவர்கள் கண்காட்சி நாள்களில் மாணவர்களுக்கும், பெற்றோருக்கும் உரிய விஞ்ஞானிகளின் மேற்பார்வையில் விஞ்ஞானிகளாகவே இருந்து விளக்கம் அளித்தனர். கண்காட்சியையொட்டி நடைபெற்ற போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் லேமினேஷன் செய்யப்பட்ட இஸ்ரோ ராக்கெட் படம் பரிசாக வழங்கப்பட்டது. அதைப் பெற்ற மாணவர்கள் தாங்களும் ஒரு விஞ்ஞானியாகிவிட்டதைப் போன்ற பெருமிதம் கொண்டனர். திருநெல்வேலியைத் தொடர்ந்து மதுரை, திருச்சி, கோவை என மேலும் 5 இடங்களில் அடுத்தடுத்து இந்த விண்வெளிக் கண்காட்சி நடைபெறவுள்ளது. தற்போது, நாடு முழுக்க உள்ள இஸ்ரோ மையங்களைப் பார்வையிட மாணவர்களுக்கு வாய்ப்பு இருந்தாலும், பாதுகாப்பு காரணம் கருதி அவர்களுக்கு நிறையக் கட்டுப்பாடுகள் உள்ளன. 
இதைத் தவிர்க்கவும், இஸ்ரோவின் பணிகள் மற்றும் பாதுகாப்புக் காரணங்கள் கருதியும், மாணவர்களுக்கான இஸ்ரோ விண்வெளி மையங்கள் அனைத்து மாநிலங்களிலும் அமைக்கப்பட உள்ளதாகவும், அதில் ஒன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் சுமார் ரூ. 100 கோடியில் அமைய உள்ளதாகவும் கூறப்படுகிறது.

No comments:

Post a Comment

Please Comment