தமிழகத்தைச் சேர்ந்த இருவர் உள்பட 46 பேருக்கு தேசிய நல்லாசிரியர் விருது - துளிர்கல்வி

Latest

Recent Posts Widget

Search This Site

Friday, September 6, 2019

தமிழகத்தைச் சேர்ந்த இருவர் உள்பட 46 பேருக்கு தேசிய நல்லாசிரியர் விருது

தமிழகத்தைச் சேர்ந்த இருவர் உள்பட 46 பேருக்கு தேசிய நல்லாசிரியர் விருது தமிழகத்தைச் சேர்ந்த இரண்டு ஆசிரியர்கள், புதுச்சேரியைச் சேர்ந்த ஒருவர் உள்பட 46 பேருக்கு தேசிய நல்லாசிரியர் விருதுகளை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வியாழக்கிழமை வழங்கி கௌரவித்தார். குடியரசு முன்னாள் தலைவர் டாக்டர் எஸ். ராதாகிருஷ்ணனின் பிறந்த தினமான செப்டம்பர் 5-ம் தேதி ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, தேசிய நல்லாசிரியர் விருது குடியரசுத் தலைவரால் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. இந்தாண்டு தேசிய நல்லாசிரியர் விருதுக்கு 46 பேர் மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தால் தேர்வு செய்யப்பட்டனர்.  தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட 46 பேரில் தமிழகத்தின் கரூர் மாவட்டம், பரமத்தி ஊராட்சி ஒன்றியப் பள்ளித் தலைமையாசிரியர் ஆர்.செல்வக்கண்ணன், கோபிச்செட்டிப்பாளையம் வைரவிழா மேல்நிலைப் பள்ளியின் சமூக அறிவியல் ஆசிரியர் எம்.மன்சூர் அலி, புதுச்சேரி கூனிச்சம்பட்டு பாவேந்தர் பாரதிதாசன் அரசுத் தொடக்கப் பள்ளியின் பொறுப்புத் தலைமையாசிரியர் எஸ். சசிக்குமார் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். தேசக் கட்டமைப்புக்கு செயற்கை நுண்ணறிவு - மனிதக் கருணை ஒருங்கிணைப்பு அவசியம்: 


ஆசிரியர் தினமான வியாழக்கிழமை தேசிய நல்லாசிரியர்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி தில்லி விஞ்ஞான் பவனில் நடைபெற்றது. அதில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பேசியதாவது: நம்மிடம் அளப்பரிய ஞானம் உள்ளது. மேலும், நல்ல மதிப்பீடுகளும் உள்ளன. ஆனால், உலகமயமாதல், போட்டி நிறைந்த யுகத்தில் தேசக் கட்டமைப்புக்காக செயற்கை நுண்ணறிவு மற்றும் மனிதக் கருணை ஆகியவை இடையே ஒரு ஒருங்கிணைப்பும், டிஜிட்டல் கற்றல் மற்றும் நற்பண்புகள் உருவாக்கத்திற்கும் இடையே சமநிலையும் அவசியமாகிறது. இது நம்மை அறிவுசார் தனிநபர்களாக மட்டுமின்றி, நல்ல மனிதர்களாகவும் உருவாக்குகிறது. இதனால், இவை அவசியமாகிறது. நற்பண்புகளை உருவாக்குவதில் பள்ளிகள் வலுவான அடித்தளமாக உள்ளன. மாணவரை நல்ல மனிதராக உருவாக்குவது கல்வியின் பிரதான நோக்கமாகும். மாணவர்களிடத்தில் ஒருமைப்பாடு, ஒழுக்கம், நேர்மையை ஏற்படுத்துவதில் ஆசிரியர்களின் பங்களிப்பு அளப்பரியது. 

 மாணவர்களை நல்ல மனிதர்களாக உருவாக்குவதை உறுதிப்படுத்துவதன் மூலம் தேசக் கட்டமைப்பு நடைமுறையில் ஆசிரியர்கள் பங்களிப்பு செய்து வருகின்றனர் என்றார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த். இந்நிகழ்வில் மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் நிஷாங்க், இணையமைச்சர் தோத்ரே சஞ்சய் ஷாம்ராவ் மற்றும் கல்வித் துறையின் உயரதிகாரிகள் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment

Please Comment